Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆண்ட்ரியா படத்துக்கு சென்சாரில் சிக்கல் நீடிப்பு

சென்னை: நயன்தாரா நடித்த ‘அறம்’ என்ற படத்தை எழுதி இயக்கியவர், கோபி நயினார். இதையடுத்து அவர் எழுதி இயக்கியுள்ள படம், ‘மனுசி’. ஆண்ட்ரியா நடித்துள்ளார். இதை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். கம்யூனிச கொள்கைகளை குழப்பும் வகையில் நிறைய காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி தணிக்கை குழுவினர் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டனர். இதற்கு எதிராக தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தனி நிபுணர் குழு அமைத்து, ‘மனுசி’ படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என்று அளித்த மனுவை பரிசீலிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சியை எடிட்டிங் செய்ய தயார். படத்தை மறுஆய்வு செய்ய தனி குழு அமைக்க வேண்டும்’ என்றும் வெற்றிமாறன் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ‘மனுசி’ படத்தை உடனே பார்வையிட்டு மறுஆய்வு செய்யப்படும் என்றும், படத்திலுள்ள ஆட்சேபகரமான காட்சி மற்றும் வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் உறுதி அளித்துள்ளது. தனது படத்துக்கு சென்சாரில் பிரச்னை ஏற்பட்டுள்ளதை அறிந்த ஆண்ட்ரியா, அதிக டென்ஷனுடன் காணப்படுகிறார்.