Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விஷால், சாய் தன்ஷிகா திருமணத்தில் திடீர் மாற்றம்

இரட்டை வேடங்களில் விக்னேஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘ரெட் ஃப்ளவர்’ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஷால் பேசுகையில், ‘படங்களில் சின்ன படம், பெரிய படம் என்று எதுவும் இல்லை. திரையில் நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதுதான் படம். என் நண்பன் விக்னேஷுக்காக இங்கு வந்தேன். பல இயக்குனர்கள் நடைமுறை சிக்கல்களை பதிவு செய்ய திணறும்போது, இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன், வரும் 2047ம் வருடத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை படமாக உருவாக்கியுள்ளார். இன்னும் 3 மாதங்களில் தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடம் திறக்கப்படும்.

சின்ன படம், பெரிய படம் என்ற பாரபட்சம் இல்லாமல், கட்டிடத்தில் அமைந்துள்ள கலை அரங்கம் உதவி செய்யும். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள். ஒரேநாளில் 10 படங்கள் திரைக்கு வருகின்றன. தயாரிப்பாளர்கள் தங்களுக்கு 100 தியேட்டர்கள் கிடைக்கிறது என்று சந்தோஷமாக இருக்கின்றனர். ஆனால், அதில் 400 ஷோக்கள் கிடைப்பது இல்லை. 100 ஷோக்கள்தான் கிடைக்கின்றன. அதனால், தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை எப்போது, எப்படி ரிலீஸ் செய்யலாம் என்பதை சொல்வதற்கு ரெகுலேஷன் கமிட்டி அமைத்தால், அது அனைவருக்கும் பேருதவியாக இருக்கும்.

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்துக்காக 9 ஆண்டுகள் தாக்குப்பிடித்து விட்டேன். இன்னும் 2 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். இந்த புதிய கட்டிடத்தில் எனது திருமணம் நடக்கும். மேலும் தாமதம் செய்ய மாட்டேன். வரும் ஆகஸ்ட் 29ம் தேதி எனது பிறந்தநாளில் ஒரு நல்ல செய்தியை சொல்வேன்’ என்றார். சாய் தன்ஷிகாவும், விஷாலும் தங்கள் காதல் திருமணத்தை ஆகஸ்ட் 29ம் தேதி நடத்துவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதில்தான் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.