Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சென்னை பட விழாவில் பரபரப்பு: ‘தமிழ் நாடு’ பெயர் எழுதிய சட்டையுடன் நடிகர் நானி

சென்னை: நானி நடிப்பில் உருவாகியுள்ளது ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘. சென்னையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, இயக்குநர் சைலேஷ் கொலானு, தமிழ்நாடு விநியோகஸ்தர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நானி அணிந்து வந்த சட்டை மீதுதான் அனைவரது பார்வையும் பட்டது. காரணம், அந்த சட்டையில் லவ் ஃபிரம் தமிழ்நாடு என்று வாசகம் இருந்தது.

இதில் தமிழ் நாடு என்ற பெயர் மட்டும் பெரிய எழுத்துகளில் இடம்பெற்றிருந்தது. ‘தமிழக அரசியலில் ஒன்றிய அரசின் குரலாக ஆளுநர் ரவி பேசி வரும் பல்வேறு விஷயங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அதுபோல் அவர், தமிழ்நாட்டை தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு என்றே தனது சட்டையில் பெயர் போட்டு வந்து தமிழ்நாடு மீதான அன்பை நானி வெளிப்படுத்தியது ரசிகர்களை பரவசமடைய செய்திருக்கிறது’ என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

விழாவில் நடிகர் நானி பேசுகையில், ‘‘நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும். விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தமிழில் பேசும் அளவிற்கு பயிற்சி பெற்றுக்கொண்டு பேசுவேன்’’ என்றார். வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. மே 1ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகும் இப்படத்தை தமிழில், சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது.