Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிரஞ்சீவியை வியக்க வைத்த நடிகர்கள்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘குபேரா’ என்ற படம் வெற்றிபெற்றுள்ளதாக, ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற சிரஞ்சீவி பேசுகையில், ‘தனுஷ் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடிப்பதாக நாகார்ஜூனா சொன்னபோது ஆச்சரியப்பட்டேன். அவரை அணுக இயக்குனருக்கு எப்படி தைரியம் வந்தது? நாகார்ஜூனா நடிக்கிறேன் என்று சொன்னபோது, என்னென்ன கற்பனை செய்திருப்பார் என்பதை நினைத்து மேலும் ஆச்சரியமாக இருக்கிறது. நாகார்ஜூனா நடித்ததே மிகப்பெரிய வெற்றி.

ஆரோக்கியம், அமைதியான நடத்தை, அணுகுமுறை போன்ற விஷயங்களில் தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தி வரும் நாகார்ஜூனாவுக்கு நன்றி. ’குபேரா’ படத்தில் என்னை நெகிழவைத்த கேரக்டர், தேவா. தனுஷின் நட்சத்திர அந்தஸ்தில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது அவரால் மட்டுமே முடியும். தெலுங்கு படவுலகில் யாராவது தேசிய விருது வென்றால் அதிக மகிழ்ச்சி அடைவோம். ஆனால், தனுஷுக்கு தேசிய விருது வெல்வது இயல்பாகி விட்டது. இப்படத்தில் நடித்ததற்காக இன்னொரு தேசிய விருதை அவர் வெல்வார் என்று நம்புகிறேன். அப்படி வெல்லவில்லை என்றால், அந்த விருதுக்கு மதிப்பே இல்லை’ என்றார். ராஷ்மிகா மந்தனா கூறுகையில், `இதுதான் நீங்களும், நானும் சேர்ந்து எடுத்துக்கொண்ட முதல் போட்டோ. இதுவே என் பொக்கிஷம்’ என்றார்.