Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சினிமா கதை சொல்வதாக கூறி வாயோடு வாய் வைத்து நடிகை மவுனி ராயிடம் இயக்குனர் அத்துமீறல்

மும்பை: படக்காட்சியை விளக்கிக் கூறுவது போல, இயக்குனர் ஒருவர் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக நடிகை மவுனி ராய் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ‘நாகின்’ சீரியல் மூலம் புகழ்பெற்ற மவுனி ராய், தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரிடம், ‘பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் அனுபவத்தை (காஸ்டிங் கவுச்) நீங்கள் சந்தித்ததுண்டா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மவுனி ராய், ‘எனக்கு அதுபோன்ற அனுபவம் ஏற்படவில்லை என்றாலும், சில வருடங்களுக்கு முன் நடந்த மோசமான சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு படத்திற்கான கதை கேட்க இயக்குனர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு வேறு சிலரும் இருந்தனர்.

அப்போது படத்தின் ஒரு காட்சியில், கதாநாயகி நீச்சல் குளத்தில் மயங்கி விழுவார். கதாநாயகன் அவருக்கு வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து காப்பாற்றுவார். இந்தக் காட்சியை விளக்குவதாகக் கூறி, அங்கிருந்த இயக்குனர், திடீரென என் முகத்தைப் பிடித்து, வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுப்பது போல தகாத முறையில் செய்து காட்டினார். அந்த நொடியில் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனேன். என் உடல் நடுங்கத் தொடங்கியது. உடனடியாக அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன். அந்த சம்பவம் மிக நீண்ட காலத்திற்கு என் மனதில் ஒரு வடுவாக இருந்தது’ என்று வேதனையுடன் குறிப்பிட்டார். மவுனி ராயின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.