Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘கூலி’ - திரைப்பட விமர்சனம்

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தங்க கடத்தல் தொழில் நடத்துபவர் சைமன் (நாகார்ஜுனா). அவரது உதவியாளர் தயாள் (சவுபின் சாகிர்). தனது தொழிலுக்கு இடையூறாக இருப்பவர்களை கொன்று குவித்து வருகிறார் சைமன். மறுபுறம் சென்னையில் மேன்ஷன் நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). திடீரென தனது உயிர் நண்பன் ராஜசேகரன் (சத்யராஜ்) மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதை கேட்டு விசாகப்பட்டினம் செல்கிறார் ரஜினி. அங்கு சென்றதும் தனது நண்பன் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை, கொலை செய்யப்பட்டது ரஜினிக்கு தெரியவருகிறது. விஞ்ஞானியான சத்யராஜ் ஒரு நாற்காலியை கண்டுபிடிக்கிறார். அதில் பலியான மிருகங்களை அமர வைத்தால் 30 வினாடிகளில் பொசுங்கி சாம்பலாகி விடும். இந்த கண்டுபிடிப்பை தனது சுய லாபத்திற்கு தவறான முறையில் பயன்படுத்த நாகார்ஜுனா பிளான் செய்கிறார்.

அதற்கு ஒத்துக்கொள்ளாத சத்யராஜை சைமன் ஆட்கள் கொன்றுவிடுகிறார்கள். சத்யராஜூக்கு 3 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதிஹாசனை வைத்து அந்த நாற்காலியை ஆப்பரேட் செய்வது எப்படி என சைமன் முயற்சி செய்யும்போது ரஜினி உள்ளே நுழைகிறார். பிறகு, நண்பனை கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? எப்படி கொன்றார்கள்? என்பதை ரஜினி கண்டுபிடித்தாரா, அவர்களை என்ன செய்தார் என்பது மீதி கதை. தனது 50வது ஆண்டில் லோகேஷ் கனகராஜுடன் சேர்ந்து சிறந்த ஆக்ஷன் பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். ஒவ்வொரு சண்டை காட்சிகளும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக ஸ்ருதிஹாசனை கடத்தி செல்வதற்காக லேடிஸ் ஹாஸ்டலுக்குள் வரும் சைமனின் அடியாட்களை ரஜினி துவம்சம் செய்கிறார். அதில், ‘அரங்கம் அதிரட்டுமே’ பாடலுக்கு ஏற்றவாறு ரஜினி சண்டையிடுவது லோகேஷின் சிக்னேச்சர் டச்.

ரஜினியின் காந்த பார்வை, ஆக்ரோஷம், ஆங்காங்கே அவர் செய்யும் காமெடி கலாட்டாக்கள் அனைத்தும் பெரியளவில் ஒர்க்கவுட் ஆகியுள்ளது. எமோஷனல் காட்சிகளில் நம்மை கண் கலங்க வைக்கிறார். படம் முழுக்க வரும் நாகார்ஜுனா 60 வயதிலும் இளமை ததும்பும் வில்லன் கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். ‘கிங்’ என்ற பட்டத்திற்கு ஏற்றவாறு கிங்காக மிளிர்கிறார் நாகார்ஜுனா. சத்யராஜ், உயிர் நண்பனாகவும், மகள்களுக்காக உருகும் தந்தையாகவும் தனது எமோஷனலான நடிப்பில் அசத்தியுள்ளார். ரஜினி சொன்னதுபோல ‘நான் கமல்ஹாசன் பொண்ணுடா’ என்பதை நிரூபித்துள்ளார் ஸ்ருதிஹாசன். பல இடங்களில் நம்மையும் எமோஷனலாக்குகிறார். மலையாள படங்களை விட சவுபின் சாகிரை இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் நன்றாக பயன்படுத்தியுள்ளார். இடைவெளிக்கு முன் அவரால் கதையில் ஏற்படும் திருப்பம் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடுகிறது.

நடனம் மட்டுமில்லாமல் கொடூர தனமான வில்லத்தனத்தால் நடிப்பிலும் நம்மை கவர்கிறார் சவுபின் சாகிர். ‘மோனிகா’ பாடலில் பூஜா ஹெக்டே தனது கவர்ச்சி நடன அசைவுகளால் நம்மை கிறங்கடிக்கிறார். ஆமிர்கான் தனது கேமியோ ரோலில் சிறப்பாக நடித்துள்ளார். இடைவெளி வரை சஸ்பென்ஸ்சாக வைத்துவிட்டு 2ம் பாதியில் உபேந்திராவின் அறிமுகம் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறது. அனிருத்தின் இசையில் ‘சிக்கிட்டு’, ‘மோனிகா’, ‘பவர் ஹவுஸ்’ உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் எப்போதும்போல அனிருத் ராக் ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளார். கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு படத்தின் ஜீவனாக உள்ளது. பிலோமின் ராஜின் எடிட்டிங் அருமை. லோகேஷ் கனகராஜின் படங்களில் ‘கூலி’ ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. அவரின் கதை, திரைக்கதை, இயக்கம் அனைத்தும் பிரமாதம். மொத்தத்தில் ‘கூலி’, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு திரைப்படம்.