சென்னை: எஸ்.கே பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் எஸ்.கமலக்கண்ணன் தயாரித்துள்ள படம், ‘மொய் விருந்து’. கதை, திரைக்கதை எழுதி சி.ஆர்.மணிகண்டன் இயக்கியுள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். அர்ச்சனா, ரக்ஷன், ஆயிஷா அபர்னதி, தீபா சங்கர், ‘பருத்திவீரன்’ சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி நடித்துள்ளனர்.
படம் குறித்து சி.ஆர்.மணிகண்டன் கூறியதாவது: தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து என்ற பழக்கம்தான் படத்தின் மையக்கரு. நான் பேராவூரணி சென்றிருந்தபோது, ‘மொய் விருந்து’ நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தேசிய விருது பெற்ற அர்ச்சனா, கிராமத்து பாரம்பரிய முறை மருத்துவச்சி வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரது குடும்பம் மொய் விருந்து என்ற பழக்கத்தை கொண்டு வந்தாலும், ஒருகட்டத்தில் அவர்களால் திரும்ப நடத்த முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அந்த பிரச்னைகள் எப்படி தீர்க்கப்படுகிறது என்பது படம். நம் மண்ணின் கலாச்சார விஷயங்களை பேசக்கூடிய படமாக உருவாகியுள்ளது.
