Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவிற்கு திரும்பிய ‘‘டார்லிங்’’ நடிகர்!

’’டார்லிங் - 2’ மற்றும் ‘விதிமதி உல்டா’ படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா. இவருடன் இரண்டு படங்களிலும் கலையரசன், காளி வெங்கட், கருணாகரன், சென்றாயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம், மாயா, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்திருந்தார்கள். டார்லிங் - 2 படத்தை ஞானவேல்ராஜாவின் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டிருந்தது. விதிமதி உல்டா வெளியான பிறகு ஏற்பட்ட தோல்வியால் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு திரையுலகைவிட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால் தொழிலதிபராக உருவெடுத்தார். அத்தொழில் நல்ல நிலையில் தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளராகவும, கதாநாயகனாகவும் களமிறங்குகிறார். இதுகுறித்து பேசிய அவர், இன்று வாய்ப்புத் தேடி வருகின்றவர்கள் முதலில் தனக்கென்று ஒரு தொழிலை அடிப்படையாக உருவாக்கிக் கொண்டு அதன் பிறகு வந்தால் இந்தத் திரையுலகில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் தோல்விகள் வந்தாலும் அதை எதிர்த்து போராடி வெற்றிபெற முடியும்” என்று தனது அனுபவங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“இன்றைய சூழ்நிலையில் மக்களிடையே ஹாரர், திரில்லர் படங்களுக்குதான் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால்தான் அடுத்த படத்தையும் ஹாரர் படமாக உருவாக்க அதற்கான கதை தேர்வுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வும் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் புதுவிதமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறேன். இந்தப் படத்தை மிகுந்த பொருட்செலவில் வித்தியாசமான கதையமைப்போடு அனைவரையும் கவரும் விதத்தில் நானே தயாரிக்கிறேன்” என்றார்.