சென்னை: சினிமா மீடியா அன்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் ராஜ் வழங்க, ஜி.தனஞ்செயனின் கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், ‘காட்ஸ்ஜில்லா’. ரோம்-காம் ஜானரில் உருவாகும் இதில் கவுதம் வாசுதேவ் மேனன், ‘சரண்டர்’ தர்ஷன், அலிஷா மிரானி, ரோபோ சங்கர், கேபிஒய் வினோத், பிளாக் பாண்டி, பிஜிஎஸ் நடிக்கின்றனர்.
சிவராஜ் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ஹர்ஷா இசை அமைக்கிறார். அரவிந்த் பி.ஆனந்த் எடிட்டிங் செய்ய, சவுரப் கேசவ் அரங்கம் அமைக்கிறார். இப்படத்தின் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், சசி, பாண்டிராஜ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது படம் குறித்து இயக்குனர் மோகன் குரு செல்வா கூறுகையில், ‘புராண கற்பனையும், நகைச்சுவையும், காதலையும் ஒருங்கிணைக்கும் வித்தியாசமான கதையுடன் படம் உருவாகிறது. காதலில் தோல்வி அடைந்த இளைஞனின் வாழ்க்கையில் தெய்வீக தலையீடு நிகழ்வதன் மூலம் சுயஅறிவு, மீட்பு மற்றும் காதலை நோக்கிய பயணம்தான் படத்தின் மையக்கரு’ என்றார்.