இந்தியாவுக்கு வரும் போதை மருந்துகளை இங்கு சப்ளை செய்யும் பலே ரவுடிகள் சாய் தீனா, அபிஷேக் ஆகியோருக்கு இடையே யார் வல்லவன் என்ற மோதல் ஏற்படுகிறது. குறிப்பிட்ட ஆட்களுக்கு போதை மருந்துகள் சப்ளை செய்வதில் தாமதமானால், ஆளையே வெட்டிச் சாய்க்கும் கூட்டத்தின் தலைவன் தாவுத். சமூக விரோதிகளான அவர்களை போலீசார் விரட்டுகின்றனர். இந்த சடுகுடு ஆட்டமே படம்.
அப்பாவி டிரைவராக வரும் லிங்கா, இறுதியில் எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் எதிர்பாராதது. அவர் தனது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். மர்மமாக இருந்து போலீசாரிடம் கண்ணாமூச்சி விளையாடும் தாவுத் ஆக ‘வத்திக்குச்சி’ திலீபன் நடித்துள்ளார் என்றாலும், கூடுதல் கெத்து காட்டியிருக்கலாம். சாரா ஆச்சர் ஹீரோயின் என்கிறார்கள். சரத் ரவிக்கு காதலியா? லிங்காவை நேசிக்கிறாரா என்று குழப்பிவிட்டு செல்கிறார். டபுள் மீனிங் டயலாக்கை காமெடி என்று நினைத்து பேசும் சாரா, அதை எப்போது நிறுத்துவார் என்று தெரியவில்லை. போலீஸ் அதிகாரியாக ராதாரவி, பலே ரவுடிகளாக சாய் தீனா, அபிஷேக் மற்றும் சரத் ரவி, அர்ஜெய், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன் ராஜ், சரவணன் சீலன், வையாபுரி ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர்.
சரத் வளையாபதி, பிரேண்டன் சுஷாந்த் ஆகியோரின் கேமரா கோணங்கள், ஓரளவு வியக்க வைக்கிறது. ராக்கேஷ் அம்பிகாபதியின் பின்னணி இசை, காட்சிகளை நகர்த்த உதவுகிறது. பிரசாந்த் ராமன் எழுதி இயக்கியுள்ளார். இது வழக்கமான கேங்ஸ்டர் படமாக இல்லாமல், சென்டிமெண்ட் கலந்து கடந்து செல்கிறது.
