இந்தியில் ‘ராஞ்சனா’, ‘ஷமிதாப்’, ‘அத்ரங்கி ரே’ ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள படம், ‘தேரே இஷ்க் மே’. இதில் தனுஷ் ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார். ‘ராஞ்சனா’, ‘அத்ரங்கி ரே’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். வரும் 28ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், ‘எனது இயக்குனரிடம், ‘ஏன் என்னை இதுபோன்ற காதல் தோல்வியை சந்திக்கும் கேரக்டருக்கு தேர்வு செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர், ‘உங்களுக்கு லவ் ஃபெயிலியர் முகம் இருக்கிறது’ என்றார். அன்று நான் வீட்டுக்கு சென்றவுடன் என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். காதல் தோல்வி முகம் என்று இயக்குனர் சொன்னதை நான் ஒரு பாராட்டாக எடுத்துக்கொண்டேன். ஆனால், அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பது மிகப்பெரிய சவாலான விஷயம். ‘ராஞ்சனா’ படம் தொடங்கி இப்படம் வரை அதுபோன்ற சவாலான விஷயம் இருந்தது. ‘ராஞ்சனா’ படத்தில் அது ஒரு சாதாரண கேரக்டராக தெரியலாம். ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது கடினமானது. சிறிது தவறினாலும், ரசிகர்களுக்கு குந்தன் கதாபாத்திரம் பிடிக்காமல் போய்விடும். அதுபோல், ‘தேரே இஷ்க் மே’ படத்தின் சங்கர் கேரக்டருக்கும் நிறைய சவால்கள் இருந்தன. படம் பார்க்கும்போது அதுபற்றி தெரியும்’ என்றார்.
