Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீண்டும் ரிலீசாகும் தனுஷ் படம்

தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் தனுஷ், அப்படியே பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் மாறுபட்ட கதையும், கேரக்டரும் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். தவிர படம் தயாரிக்கிறார், இயக்குகிறார், பாடுகிறார், பாடல் எழுதுகிறார். விரைவில் அவர் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். இந்நிலையில், வரும் 28ம் தேதி அவரது 42வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அவர் நடித்த ‘புதுப்பேட்டை’ என்ற படத்தை வரும் 26ம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை ரீ-மாஸ்டரிங் செய்து, டிஜிட்டல் முறையில் புதுப்பித்து, 4K தரத்தில் விஜய் சூர்யா பிலிம்ஸ் சார்பில் எஸ்.விஜய நிர்மலா சரவண பவா வெளியிடுகிறார்.

2006 மே 26ம் தேதி செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா, விஜய் சேதுபதி நடித்த ‘புதுப்பேட்டை’ என்ற படம், தமிழ் சினிமாவின் ‘கல்ட் கிளாசிக்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தில் ஒரு கேரக்டரில் நடிப்பதற்காக தனுஷ் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரிராஜா ஐதராபாத்துக்கு சென்றார். மூத்த மகன் செல்வராகவன் இயக்க, இளைய மகன் தனுஷுடன் அவர் நடித்த காட்சிகள் தனக்கு திருப்தி அளிக்காத நிலையில், கஸ்தூரிராஜாவுக்குப் பதிலாக வேறொரு நடிகரை வைத்து செல்வராகவன் படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.