தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ என்ற படம், வரும் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு இசை அமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், ‘இது நமது மண் வாசனையை பிரதிபலிக்கும் படமாக இருக்கும். ‘அசுரன்’ படத்துக்கு பிறகு நான் இசை அமைக்கும் ஃபோக் ஜானர் படம் இது. கதைக்கேற்ற பாடல்களை மட்டுமே உருவாக்கியுள்ளோம். படத்துடன் பார்க்கும் காட்சி அனுபவம் பிரமாதமாக இருக்கும். படத்தை பார்த்து முடித்ததும், சொந்த ஊருக்கு சென்று வந்த உணர்வு ஏற்படும்.
இதற்கு முன்பு தனுஷ் இயக்கிய ‘ராயன்’ என்ற படத்தில், தனுஷின் சகோதரர்களில் ஒருவராக நடிக்கும்படி என்னிடம் கேட்டனர். ஆனால், அந்த கதாபாத்திரம் அவருக்கு துரோகம் செய்யும் வகையில் இருந்தது. திரைப்படத்தில் கூட நான் எனது நண்பர் தனுஷுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அவருக்கு துரோகம் செய்யும் நான்கு பேர்களில் ஒருவராக எப்போதுமே நான் இருக்க மாட்டேன்.
‘துள்ளுவதோ இளமை’ படத்தின் இரண்டாவது பாகத்தை தனுஷ் இயக்கினால், அதிலுள்ள பாசிட்டிவ் கேரக்டரில் மட்டுமே நான் நடிப்பேன். தனுஷுக்கு துரோகம் செய்வது அல்லது அவரை எதிர்ப்பது போன்ற கேரக்டரில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். காரணம், தனுஷ் மீது எனக்கு அவ்வளவு அன்பும், பாசமும் இருக்கிறது’ என்றார்.