மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்: காளமாடன்’ படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரெஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்க, எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட், நீலம் ஸ்டுடியோஸ் சேர்ந்து தயாரித்துள்ளன. வரும் தீபாவளியன்று வெளியாகும் படம் குறித்து மாரி செல்வராஜ் கூறுகையில், ‘எனது கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை சொல்லும் இதில், பதற்றமான தென்தமிழகத்து இளைஞர்களின் வாழ்க்கையும் கலந்திருக்கிறது. ஒரு வருடம் துருவ் விக்ரம் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு, தன்னை கபடி வீரனாக மாற்றிக்கொண்டார்.
அவர் மிகவும் சிரமப்பட்டபோது, வேறொரு கதையில் நடிக்கிறீர்களா என்று கேட்டேன். ‘எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றாலும், எப்பாடுபட்டாவது படத்தை உருவாக்க வேண்டும் என்பதில் வெறியாக இருக்கிறீர்கள். இது உங்களின் லட்சியப் படம் என்று நினைக்கும்போது, உங்களை நம்பி நான் நடிக்கிறேன்’ என்றார். துருவ் விக்ரமின் வார்த்தைகள் என்னை உறுதியாக்கி விட்டது. படத்தை பார்த்த சிலர், ‘பெரிய அளவில் சாதித்துவிட்டாய். மனதில் நினைத்ததை அடைந்துவிட்டாய்’ என்று பாராட்டினர். வருங்காலத்தில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக துருவ் விக்ரம் புகழ்பெறுவார்’ என்றார்.