உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீடு இருக்கிறது. கடந்த 12ம் தேதி சில மர்ம நபர்கள், திஷா பதானியின் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பித்து ஓடினர். இதில் வீட்டில் இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு ரோஹித் கோதாரா, கோல்டி பிரார் கும்பல் பொறுப்பு ஏற்றுள்ளது. ஆன்மீக...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீடு இருக்கிறது. கடந்த 12ம் தேதி சில மர்ம நபர்கள், திஷா பதானியின் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பித்து ஓடினர். இதில் வீட்டில் இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு ரோஹித் கோதாரா, கோல்டி பிரார் கும்பல் பொறுப்பு ஏற்றுள்ளது. ஆன்மீக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த கும்பல் தெரிவித்திருந்தது.
இச்சம்பவம் குறித்து திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் சிங் பதானி கூறுகையில், ‘எனது மூத்த மகள் குஷ்பு பதானியின் (திஷா பதானி சகோதரி) கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. நாங்கள் சனாதனிகள். சாதுக்களை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். இந்த விவகாரத்தில் எங்களுக்கு எதிராக ஏதோ ஒரு சதி நடந்துள்ளது. துப்பாக்கியால் சுடும் அளவுக்கு என் மகள் அநாகரீகமாக எதுவும் பேசவில்லை. அனிருதா ஆச்சார்யா பெண்கள் குறித்து ஒரு கருத்து தெரிவித்தார். என் மகள் ஒரு கருத்து தெரிவித்தார். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது’ என்றார்.
திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி, கடந்த ஜூலை மாதம், அனிருதா ஆச்சார்யா பெண்களை வெறுக்கும் வகையில் கருத்து தெரிவித்திருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், இந்த கருத்து ஆன்மீக தலைவர் பிரேமானந்த் ஜி மகராஜை அவமதிக்கும் வகையில் இருப்பதாக செய்தி வெளியானது. இதற்கு குஷ்பு பதானி உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தார்.