தெலுங்கில் பிரபலமாக இருக்கும் கிரித்தி ஷெட்டி, தமிழில் கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’, ரவி மோகனுடன் ‘ஜீனி’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய படங்களில் நடிக்கிறார். அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் வந்தாலும், திரைப்படம் இயக்க வேண்டும் என்பதை மிகப்பெரிய லட்சியமாக வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒரு படம் மக்களுக்கு பிடிக்குமா? அதில் ஏதாவது புதிய விஷயங்கள் இருக்குமா என்று ஒரு ரசிகையாக மாறி கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். தினமும் என்னை மேம்படுத்திக்கொள்வதற்கு கிளாசிக்கல், வெஸ்டர்ன் டான்ஸ் கற்றுக்கொள்கிறேன். பாக்ஸிங், மார்ஷியல் ஆர்ட்ஸ்ட் என்று, ஆக்ஷனுக்கான பயிற்சியும் பெற்று வருகிறேன். மென்மையான கதைகளை விட, ஆக்ஷன் கதைகளில் நடிக்க பெரிதும் விரும்புகிறேன்.
ஹீரோயினுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படும் படங்களில் நடிக்க முன்னுரிமை தருகிறேன். அதற்காக என் சம்பளத்தை குறைத்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல்தான் திரைத்துறைக்கு வந்தேன். நடிக்க வருவதற்கு முன்பு, ஒரு படம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது கூட எனக்கு தெரியாது. ஆனால், இங்கு ஒவ்வொருவரின் கடின உழைப்புக்கு பின்னால், அதிக பொறுப்புணர்வு கொண்ட ஒரு இயக்குனர் இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டேன். இதனால் எனக்கு டைரக்ஷன் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. உண்மையிலேயே இது மிகப்பெரிய சவாலான வேலைதான். எனக்கு சவால்கள் என்றால் பிடிக்கும். எனவே, திரைப்படம் இயக்கும் ஆசை அதிகரித்து வருகிறது. தெலுங்கு படவுலகில் நான் ஹீரோயினாக அறிமுகமான ‘உப்பென்னா’ என்ற படத்தின் இயக்குனர் புச்சி பாபு முதல், இப்போது நடித்து வரும் சில படங்களின் இயக்குனர்கள் வரை, ஒவ்வொருவரையும் எனது குருவாக ஏற்றுக்கொண்டு, திரைப்படம் இயக்குவது எப்படி என்று ஆழமாக கற்றுள்ளேன். விரைவில் என்னை இயக்குனராக பார்க்கலாம்’ என்றார்.
