Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தோல்வி பட இயக்குனர் திடீர் விலகல்

இந்தியில் உருவாகும் ‘தூம் 4’ என்ற படத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து அயன் முகர்ஜி விலகியுள்ளார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம், ‘வார் 2’. ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடித்த இப்படம் படுதோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து ‘தூம் 4’ என்ற படத்தை இயக்க ஒப்பந்தமானார். தற்போது அந்த பொறுப்பில் இருந்து தானாக விலகிய அவருக்கு பதிலாக வேறொருவரை இயக்குனராக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘பிரம்மாஸ்திரா 2’ என்ற படத்துக்கான திரைக்கதையை எழுதும் பணியை அயன் முகர்ஜி தொடங்கியுள்ளார்.

அடுத்த ஆண்டு படப்பிடிப்பை தொடங்க இருப்பதால், ‘தூம் 4’ என்ற படத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது. ரன்பீர் கபூர், அலியா பட் நடித்திருந்த ‘பிரம்மாஸ்திரா’ என்ற பான் இந்தியா படம் ஓரளவு ஹிட்டானது என்பதால், அதன் அடுத்தடுத்த பாகங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது அதற்கான பணிகளை அயன் முகர்ஜி தொடங்கியுள்ளார். மேலும் ‘வார் 2’, ‘தூம் 4’ ஆகிய படங்களின் கதை அவரால் எழுதப்பட்டது இல்லை என்பதும் ஒரு காரணம். வெறும் இயக்குனராக மட்டுமே பணியாற்ற அவர் விரும்பவில்லை என்று, படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை ‘தூம் 4’ படத்தின் தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

அயன் முகர்ஜியின் முடிவை தயாரிப்பாளரும், ரன்பீர் கபூரும் ஏற்றுக்கொண்டு, ‘பிரம்மாஸ்திரா 2’ வெற்றிபெற அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்தனர். விரைவில் ‘தூம் 4’ என்ற படத்தின் இயக்குனர் யார் என்பதை படக்குழு அறிவிக்கிறது.