சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இளம் ஹீரோக்கள் போட்டி களத்தில் இறங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு பெரிய படங்கள் ரிலீசாகும். இதனால் தங்களது ஆஸ்தான ஹீரோவின் படங்களை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்த தீபாவளிக்கு ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரின் எந்த படமும் திரைக்கு வரவில்லை. அதேபோல் விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களும் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இளம் ஹீரோக்களான ஹரீஷ் கல்யாண், துருவ் விக்ரம், பிரதீப் ரங்கநாதன் ஆகியோரின் படங்கள் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. அதன்படி ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி நடித்துள்ள ‘டீசல்’ படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக ஹரீஷ் கல்யாண் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இந்த படத்தை எழுதி, இயக்கியுள்ளார். துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பைசன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனே ஹிட் ஆகியுள்ளன. கபடி விளையாட்டின் பின்னணியில் ஆக்ஷனையும் காதலையும் கலந்து சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது.
‘லவ் டுடே’, ‘டிராகன்’ என அடுத்தடுத்து இரண்டு 100 கோடி ரூபாய் வசூல் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தை அறிமுக இயக்குனர் கீர்த்திவாசன் இயக்கியுள்ளார். இதில் மமிதா பைஜு ஹீரோயின். புஷ்பா பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கரஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த இளம் ஹீரோக்கள் படங்களை தவிர சமுத்திரக்கனி, கவுதம் மேனன் முதன்மை கேரக்டர்களில் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்போதைக்கு இந்த 4 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் மேலும் ஒரு சில படங்கள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.