மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோஹிணி, டிராவிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள “டியூட்” திரைப்படம் தீபாவளி ரிலீசாக சினிமா ரசிகர்களை ஈர்த்துள்ளது.
சர்ப்ரைஸ் ஈவென்ட் நடத்தும் அகன் (பிரதீப் ரங்கநாதன்) மற்றும் குறள் (மமிதா பைஜு) — இவர்கள்தான் கதை மையம். காதல் தோல்வியில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் அகனிடம், குறள் தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் அகன் அதை மறுக்கிறார்.
மனம் உடைந்த குறள் ஊரை விட்டு போகிறார். அதன்பிறகுதான் அகனுக்கு குறளின் முக்கியத்துவம் புரிகிறது. அவர் மீது காதல் எழுகிறது. மீண்டும் திரும்பி வந்து திருமணத்துக்கு விருப்பம் கேட்க, குறள் மறுத்து விடுகிறார் — ஏனென்றால் இப்போது அவள் வேறு ஒருவரை காதலிக்கிறாள். அந்த உணர்ச்சி மாறும் தருணங்களே கதையின் உயிர்.
பிரதீப் ரங்கநாதன் படத்தின் ஹார்ட்பீட். கதையின் நரம்பு அவரிடம்தான் இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அவர் எனர்ஜியோடு திரையை பிடித்துக்கொள்கிறார். மமிதா பைஜு, அழகுடன் சுறுசுறுப்பான டாம் கேர்ள். சிரிப்பிலும் கண்ணீரிலும் கலந்திருக்கும் உண்மை உணர்வு மனதில் நிற்கும்.
சரத்குமார், இரண்டு முகங்கள் கொண்ட அப்பா ஒரு பக்கம் நகைச்சுவை, மறுபக்கம் ஜாதி வெறி. இரண்டையும் சமநிலையுடன் கையாளும் அவர் நடிப்பு பாராட்டத்தக்கது. அதிலும் வில்லத்தனத்துக்குள் காமெடி சேர்ப்பது புதுசாகப் பட்டிருக்கிறது. டிராவிட் “ஹீரோ ஃப்ரெண்ட்” டேக்-இல் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு நடிகர்.
“எதற்கும் கலாச்சாரம், மரபு என்று பெயர் வைத்துக் கொள்ளலாம், ஆனால் அந்த சுமையையெல்லாம் பெண்களின் தாலியில் ஏன் வைக்கிறீர்கள்?” 2025-இலும் காதலித்த நபருடன் திருமணம் செய்ய முடியாத நிலை வெட்ககரமானது என்பதை, இளைஞர்கள் ரசிக்கும் “2K ஸ்டைல்” கதையிலேயே காண்பித்துள்ளார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன்.
போலியான கல்யாணக் காட்சிகளை விலக்கியிருந்தால் படம் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கும். ஆனால் அதைத் தாண்டியும் படம் முழுவதும் ஒரு உற்சாகம், வேகம், புதுமை இருக்கிறது. அதற்கு சாய் அபயங்கர் இசை தாளங்கள் சரியான பின்புலமாக அமைந்துள்ளன. நிகேத் பொம்மி ஒளிப்பதிவில் சென்னையின் அழகை ஸ்டைலாக காட்சிப்படுத்தியிருக்கிறார். பரத் விக்ரமன் எடிட்டிங் வேகத்தை எங்கும் சிதைக்காமல் கொண்டுசென்றிருக்கிறது.
“ஐந்தறிவு கொண்ட நாய் கூட விரும்பிய நாயுடன் இணைய முடிகிறது, ஆனால் ஆறறிவு படைத்த பெண் தன் விருப்பப்படி இணைக்க முடியாதா?” — என்ற வசனம் தியேட்டர் முழுக்க கைத்தட்டலைப் பெற்றிருக்கிறது. என்னதான் தாலி செண்டிமெண்ட் மீது நம்பிக்கை இல்லை என்றாலும், அந்தப் பெண்ணுக்கு உணர்வு இருக்கிறது எனக் கூறினாலும், ஆயிரம் பேர் ஆசீர்வாதத்தை பொய்யாக்க முடியாது , அதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். இரண்டாம் பாதி சற்று வேகம் குறைகிறது. அதையும் தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் “டியூட்” இன்றைய இளைஞர்களுக்கும் பழைய தலைமுறை மனநிலையுடையவர்களுக்கும் ஒரு வித்தியாசமான டிரெண்டிங் கிளாஸ் எடுக்கிறது.