Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டியூட் விமர்சனம்...

சென்னையில் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தும் பிரதீப் ரங்கநாதன், வரிசையாக காதலில் தோல்வி அடைகிறார். அவரது தாய்மாமனும், அமைச்சரு மான சரத்குமாரின் மகள் மமிதா பைஜூ, பிரதீப் ரங்கநாதனுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக தனது காதலை தெரிவிக்கிறார். அதை ஏற்க மறுக்கும் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூவுடன் நட்பு மட்டுமே இருப்பதாக சொல்லி நழுவுகிறார். இதனால் வேதனைக்குள்ளான மமிதா பைஜூ, அடுத்து ஹிருது ஹாரூனை காதலிக்கிறார்.

இந்த விஷயம் தெரிவதற்கு முன்பே மமிதா பைஜூவை மறக்க முடியாமல் தவிக்கும் பிரதீப் ரங்கநாதன், அவரை தீவிரமாக காதலிக்கிறார். ஆனால், அவரது காதலை ஏற்க மறுக்கும் மமிதா பைஜூ என்ன முடிவு செய்கிறார், பிரதீப் ரங்கநாதனின் கதி என்ன என்பது மீதி கதை. ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் வழக்கமான தனது காதல், காமெடி கலாட்டாக்களாலும் மற்றும் பாடிலாங்குவேஜ் மூலமும் சிரிக்க வைக்கிறார்.

காதல், பிறகு தோல்வி, மீண்டும் காதல் போன்ற விஷயங்களில் மமிதா பைஜூ கச்சிதமாக நடித்துள்ளார். அமைச்சராகவும், அப்பாவாகவும் சரத்குமார் தனது காமெடி மற்றும் வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார். ஹிருது ஹாரூன் நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது. மற்றும் டிராவிட் செல்வம், ரோகிணி, நேஹா ஷெட்டி, சத்யா ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர்.

கலர்ஃபுல் ஒளிப்பதிவை வழங்கிய நிகேத் பொம்மி ரெட்டி, காட்சிகளை கச்சிதமாக கையாண்ட எடிட்டர் பரத் விக்ரமன் ஆகியோரை பாராட்டலாம். சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் அவரது கடின உழைப்பு தெரிகிறது. ஜென் ஸீ தலைமுறையினரின் காதலை சொல்லி, சாதிவெறியை விளாசியுள்ள இயக்குனர் கீர்த்தீஸ்வரன், கதைக்கான லாஜிக் பற்றியோ, கலாச்சாரம் குறித்தோ கவலைப்பட்டதாக தெரியவில்லை.