Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சனாதன சங்கிலியை நொறுக்க கல்விதான் ஆயுதம்: கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

சென்னை: சர்வாதிகார, சனாதான சங்கிலிகளை நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், கம்யூனிஸ்ட் எம்.பி சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கமல்ஹாசன் பேசியதாவது: சமூகத்தில் பெரியவர்கள் பட்டியலில் சேருவதற்கு தான் நானும் ஆசைப்பட்டேன். சூர்யா இளமையிலேயே ஆசைபட்டுவிட்டார். கல்வியை கற்றே தீருவேன். அதை மற்றவர்களும் கற்றுக்கொள்ள ஆவன செய்வேன் என சொல்வது ஒரு நீட்சி. அகரம் பல மருத்துவர்களை உருவாக்கி உள்ளது. 2017 க்கு பிறகு இவர்களால் இந்த முயற்சியை தொடர முடியவில்லை. நீட் ஏன் வேண்டாம் என்கிறோம் என்பது இப்போது புரிகிறதா?.

2017-ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை பல மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் செய்துவிட்டது ‘நீட்’. அந்த சட்டத்தை மாற்றி எழுதுவதற்கான பலத்தை கொடுப்பது கல்வி தான். அந்த கல்வி ஆயுதமின்றி நாட்டையை செதுக்கவல்லது. சர்வாதிகார, சனாதான சங்கிலிகளை நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான். இதை தவிர வேறு எதையும் கையிலெடுக்காதீர்கள்.

அதில் வெல்ல முடியாது. ஏனென்றால் பெரும்பான்மை மூடர்கள் உங்களை தோற்கடித்துவிடுவார்கள். அறிவுக்கு வேலை இருக்காது. இவர்கள் செய்யும் பணிகள் குறித்து நான் முதல்வரிடம் ஆலோசித்தேன். என்ஜிஓ-க்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றேன். இதை பார்த்து அரசு கடைபிடித்தாலும் தவறில்லை. அது அரசுக்கு அவமானம் கிடையாது. நல்லது எதிரியிடமிருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம் தவறில்லை. நீட் கூட அரசியல் அல்ல. கல்வி தொடர்புடையது தான் என்றார். இறுதியாக அகரம் செயலியை கமல் தொடங்கி வைத்தார்.