Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எமகாதகி: விமர்சனம்

நினைத்ததை சாதிக்காமல் விட மாட்டேன்’ என்பதில் உடும்புப்பிடியாக இருப்போரை எமகாதகன், எமகாதகி என்பார்கள். ஹீரோயின் சரியான எமகாதகி. செத்தாலும் தன் பிடிவாதத்தால் பல விஷயங்களைச் சாதிக்கிறார். ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன், கீதா கைலாசத்தின் மகள் ரூபா கொடுவாயூர். அவருக்கும், வேறு சாதியைச் சேர்ந்த நாகேந்திர பிரசாத்துக்கும் காதல். இது அரசல்புரசலாக ஊர் தலைவரின் போட்டியாளருக்கு தெரிந்து அவரை எச்சரிக்க, கோபத்துடன் வீட்டுக்கு வரும் ஊர் தலைவர், மகளை அடிக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் மகள் தூக்கில் தொங்கி உயிரை விடுகிறார்.

அவர் மூச்சுத்திணறலால் இறந்ததாக குடும்பத்தினர் நாடகமாட, இறுதி ஊர்வலத்துக்கு தயாராகும்போது சடலம் எழ மறுக்கிறது! அப்போது விஷயம் அறிந்து போலீசார் வர, ஊராருக்கு தற்கொலை விஷயம் தெரிந்து கொதிக்கின்றனர். சடலம் சில உண்மைகளை ஊராருக்குச் சொல்ல முயற்சிக்கிறது. அது எப்படி சாத்தியம்? அந்த உண்மைகள் என்ன என்பது, எதிர்பாராத கிளைமாக்ஸ். கதையின் நாயகியாகவும், பிறகு சடலமாகவும் ரூபா கொடுவாயூர் வழங்கியுள்ள ‘உயிரோட்டமான’ நடிப்பு அபாரம். புன்னகை தவழும் அவரது முகம் கவனத்தை ஈர்க்கிறது. நாகேந்திர பிரசாத், ராஜூ ராஜப்பன், கீதா கைலாசம், ஹீரோயின் அண்ணன் சுபாஷ் ராமசாமி, அண்ணி ஹரிதா மற்றும் குடிகாரன், போலீஸ் அதிகாரி, வெட்டியான், பாட்டி, கோயில் தர்மகர்த்தா இயல்பாக நடித்து, சினிமா என்ற உணர்வை மறக்கடித்து விடுகின்றனர்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை கிராமம் ஒன்றை கண்முன் நிறுத்தும் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், காட்சிகளின் அழுத்தத்தை பின்னணி இசையால் ஆடியன்சுக்குக் கடத்தும் ஜெஸின் ஜார்ஜ் பாராட்டுக்குரியவர்கள். கதையின் தன்மையை விறுவிறுப்பு குறையாமல் கொடுத்திருக்கும் எடிட்டர் ஜித் சாரங் பணி குறிப்பிடத்தக்கது. மனிதர்களை மீறி ஒரு சக்தி இருக்கிறது என்று நம்புபவர்களை மதித்தும், நம்ப இருப்பவர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ப பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். இன்னமும் சாதி பிரச்னையை கையிலெடுப்பது ஏன் என்று தெரியவில்லை.