சென்னை: தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிக ராக விஜய் தேவரகொண்டா, முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனா புகழ்பெற்றுள்ளனர். ராஷ்மிகா மந்தனா இந்தியிலும் நடிப்பதால், அவரை ‘நேஷனல் கிரஷ்’ என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் சில வருடங்களாக தீவிரமாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள், தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
நேற்று முன்தினம் ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் இந்த நிகழ்ச்சி நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 2026 பிப்ரவரியில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா காதல் திருமணம் நடக்க இருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் தெலுங்கில் ‘கீத கோவிந்தம்’ என்ற படத்தில் ஜோடி சேர்ந்தனர்.
அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பு பிறகு காதலாக மலர்ந்தது. தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர். அப்போது அவர்களின் காதல் வலுப்பெற்றது. தற்போது இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்கு முன்பு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் ராஷ்மிகா மந்தனாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. திடீர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் திருமணம் ரத்து செய்யப்பட்டது.