சென்னை: ‘காந்தாரா’ படமாக்கப்பட்ட கிராமத்துக்கு குடும்பத்துடன் சென்று செட்டில் ஆகிறார் அப்பட இயக்குனரும் ஹீரோவுமான ரிஷப் ஷெட்டி. ‘காந்தாரா’ மற்றும் ‘காந்தாரா சாப்டர் 1’ ஆகிய படங்களை ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹீரோவாக நடித்தார். ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு பாகங்களையும் தனது சொந்த கிராமமான குந்தபுராவில் ரிஷப் ஷெட்டி படமாக்கினார்.
கர்நாடக மாநிலத்திலுள்ள கடற்கரை கிராமம்தான் குந்தபுரா. இங்கிருந்து வந்து பெங்களூரில் ரிஷப் ஷெட்டி செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து தனது கிராமத்தில் அந்த கிராமத்தின் கதையை படமாக்கியதால் அவருக்கு சொந்த ஊரின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூரை விட்டு விட்டு குந்தபுராவில் மனைவி, மகன், மகளுடன் சென்று வசிக்க அவர் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து ரிஷப் ஷெட்டி கூறும்போது, ‘‘எனது மண்ணின் பெருமையை ‘காந்தாரா’ மூலம் உலகத்துக்கு சொல்லிவிட்டேன். அந்த மண்ணுக்கு நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன். அதனால் அங்கேயே சென்று வாழ முடிவு செய்துவிட்டேன். எனது குழந்தைகளை அங்குள்ள பள்ளியில் சேர்க்கப் போகிறேன். எனது முடிவில் என் மனைவிக்கும் மகிழ்ச்சியே’’ என்றார்.