Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குடும்ப சொத்து வழக்கில் திருப்பம்: சைப் அலிகானுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: போபால் நவாப் குடும்ப சொத்துத் தகராறு வழக்கை மீண்டும் கீழ் நீதிமன்றத்திற்கே விசாரணைக்கு அனுப்பிய மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலின் கடைசி நவாப் ஹமிதுல்லா கான் 1960ம் ஆண்டு மறைந்த பிறகு, அவரது மகள் சஜிதா சுல்தானை வாரிசாக கடந்த 1962ல் ஒன்றிய அரசு அங்கீகரித்தது.

இதனை எதிர்த்து, இஸ்லாமிய தனியார் சட்டப்படி சொத்துக்களைப் பிரிக்கக் கோரி நவாபின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் 1999ம் ஆண்டில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், 2000ம் ஆண்டில் சஜிதா சுல்தான் மற்றும் அவரது வாரிசுகளான மன்சூர் அலி கான், நடிகை ஷர்மிளா தாகூர், நடிகர்கள் சைப் அலி கான், சோஹா அலி கான் மற்றும் சபா சுல்தான் ஆகியோருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 30ம் தேதி ரத்து செய்தது. மேலும், வழக்கை முடித்து வைக்காமல், மீண்டும் புதிதாக விசாரிப்பதற்காக கீழ் நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பியது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, நவாபின் மூத்த சகோதரர் வழித்தோன்றல்களான உமர் பரூக் அலி மற்றும் ரஷீத் அலி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சைப் அலி கான் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.