Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கல்யாணியின் போட்டோவால் ரசிகர்கள் குழப்பம்

இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் கல்யாணி பிரியதர்ஷன். தமிழில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ஹீரோ’, சிம்பு ஜோடியாக ‘மாநாடு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ரவி மோகன் நடிப்பில் உருவாகும் ‘ஜீனி’ மற்றும் மலையாளத்தில் ‘ஓடும் குதிரை சாடும் குதிரை’ மற்றும் சூப்பர் ஹீரோ படமான ‘லோகா: சாப்டர் 1 - சந்திரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழில் கார்த்திக்கு ஜோடியாக ‘மார்ஷல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன்,

இந்நிலையில், மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிறுவயது போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ”எப்போதுமே எனது நண்பனாக இருக்கும் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருந்தார் கல்யாணி. அந்த போட்டோவில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இரண்டு குழந்தைகளுடன் போஸ் கொடுத்துள்ளார். அதில் ஒரு குழந்தை பிரணவ் மோகன்லால், மொட்டை தலையுடன் இருக்கும் மற்றொருவர் யார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் கேட்டு வந்தனர்.

தற்போது இது குறித்து பதிவிட்டுள்ள கல்யாணி பிரியதர்ஷன், ”நேற்று நான் வெளியிட்ட புகைப்படத்தில் ஜாக்கி ஷெராப்புடன் இருக்கும் சிறுவன் தான் என்னுடைய நண்பன் பிரணவ் மோகன்லால். அந்த போட்டோவில் இருக்கும் மொட்டை வேறு யாரும் இல்லை, அது நான் தான்” என்று கூறியுள்ளார். பிரணவ் மோகன்லாலும், கல்யாணி பிரியதர்ஷனும் நீண்ட காலமாக காதலிப்பதாக தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.