தெலுங்கு முன்னணி நடிகர் மோகன் பாபுவின் மகள் என்ற அடையாளத்துடன் நடிக்க வந்தவர், லட்சுமி மன்ச்சு. அவர் நடித்துள்ள ‘தக்ஷா’ என்ற படம் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்தது. வம்சி கிருஷ்ண மல்லா இயக்கியுள்ளார். ஸ்ரீலட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ், மன்ச்சு எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளன. இதில் மோகன் பாபு, சமுத்திரக்கனி, சித்ரா சுக்லா நடித்துள்ளனர். தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’, அனுஷ்கா ஷெட்டியுடன் ‘இஞ்சி இடுப்பழகி’, ஜோதிகாவுடன் ‘காற்றின் மொழி’ உள்பட சில படங்களில் லட்சுமி மன்ச்சு நடித்துள்ளார். தற்போது வெளியான ‘தக்ஷா’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இதில் மோகன் பாபுவுடன் நடித்தது குறித்து உணர்வுப்பூர்வமான பதிவை வெளியிட்ட லட்சுமி மன்ச்சு, ‘தெலுங்கில் ‘தக்ஷா’ என்ற படத்தில் என் தந்தையுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக பெருமைப்படுகிறேன். இப்படத்தின் மூலம் எனது கனவு நனவாகி இருக்கிறது. என் தந்தையின் ஆசி எப்போதும் எனக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார். கடந்த 2010ல் ‘ஜும்மாண்டி நாதம்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான லட்சுமி மன்ச்சு, அதில் மோகன் பாபுவுடன் நடித்திருந்தார். தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர் தனது தந்தையுடன் இணைந்து நடித்துள்ளார்.