பாலிவுட் முன்னணி நடிகரும், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டு தவிப்பவருமான சல்மான்கான், வரும் டிசம்பர் மாதம் 60 வயதை பூர்த்தி செய்கிறார். எனினும், இன்னும் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறார். சிலரை அவர் காதலித்தாலும், எதுவுமே வெற்றிபெறவில்லை. நடிகை சங்கீதா பிஜ்லானியுடன் திருமணம் வரை சென்று, கடைசியில் அந்த திருமணம் நின்றுவிட்டது. சமீபத்தில் சல்மான்கான் தனது பழைய காதல் உறவுகள் குறித்து அதிரடியாக பேசினார்.
அவர் கூறுகையில், ‘தம்பதிகளில் ஒரு பார்ட்னரை விட மற்றொரு பார்ட்னர் அதிக வளர்ச்சி அடையும்போது, அங்கு கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன. அங்கு ஒருவர் பாதுகாப்பற்று இருப்பதாக உணர்கிறார். எனவே, இரு பார்ட்னர்களும் சமமாக வளர வேண்டும். எனது முந்தைய உறவுகள் சரிப்படாததற்கு யார் காரணம் என்று கேட்டால், நான்தான் முக்கிய காரணமாக இருப்பேன். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். எனக்கும் ஒருநாள் குழந்தை பிறக்கும். இதுபோல் டி.வியில் வெளிப்படையாக பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அஜய் தேவ்கனும், அக்ஷய் குமாரும் என்னை எச்சரித்தனர்’ என்றார்.