Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பறந்து போ: விமர்சனம்

மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி தம்பதியின் இயந்திரத்தன வாழ்க்கையால் தனிமையில் இருந்து பாதிக்கப்பட்ட மகன் மிதுல் ரயான், ஒருகட்டத்தில் வீட்டை விட்டு ஓட முயற்சி செய்கிறான். இதன் பிறகு மிர்ச்சி சிவாவும், மிதுல் ரயானும் பைக் ரைடுக்கு கிளம்புகின்றனர். ஒரிஜினல் பயணத்தில் மாயைகள் உடைந்ததா? பெற்றோர் மீது மகனுக்கு பாசம் பிறந்ததா என்பது மீதி கதை. ஒன்லைன் பன்ச் காமெடியுடன், இயல்பான நடிப்பில் மிர்ச்சி சிவா அசத்தியுள்ளார். ஸ்கூல் கிரெஷ் அஞ்சலியுடனான அவரது நட்பு நாகரீகமாக கையாளப்பட்டுள்ளது. மகன் மீது பாசம், கணவனுடன் காதல், நிதி பின்னடைவால் ஏற்படும் அழுத்தம் என்று, கிரேஸ் ஆண்டனியின் யதார்த்த நடிப்பு கிரேட்.

முழு படத்தையும் மிதுல் ரயான் தன் தோளில் சுமந்திருக்கிறான். பல விருதுகள் நிச்சயம். அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் மற்றும் மிதுல் ரயானின் ஸ்கூல் கிரெஷ்சாக வரும் சிறுமி, கிரேஸ் ஆண்டனியின் உதவியாளரான இளம் பெண் ஆகியோர் கச்சிதமாக நடித்துள்ளனர். பாசப் போராட்டத்தை புரிந்துகொண்டு, நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார் என்.கே.ஏகாம்பரம். யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் தயாநிதியின் இசை கூட்டணிக்கு சபாஷ். மதி வி.எஸ் கத்தரியை கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் உலகையும் எட்டிப்பார்க்க வைத்து, பாடம் நடத்தி இருக்கிறார் இயக்குனர் ராம்.