Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

“ப்ரீடம்”பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”. இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது….

படம் ஆரம்பிக்கும் முன்னாடி சத்ய சிவா ஒரு லைன் சொன்னார், ஆனால் அவரை விட தயாரிப்பாளர் பாண்டியன் சார் சிறப்பாகப் படத்தோடு இன்வால்வ் ஆகி கதை சொன்னார். படம் முழுக்க அவரிடம் மிகப்பெரிய உற்சாகம் இருந்தது. படத்தில் எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். படம் அடுத்த வாரம் வருகிறது, ரொம்ப நம்பிக்கையாக இருக்கிறோம். சத்ய சிவா என்னிடம் மிக எளிமையாகப் பழகினார், அவருக்கு என்ன வேண்டும் என்பதைக்கூட அமைதியாகத்தான் சொல்வார். படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். சசி சார் தொடர்ந்து உங்களுடன் வேலை பார்ப்பது மகிழ்ச்சி. எல்லோரும் இப்படத்தில் நன்றாக நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள் முழு உழைப்பைத் தந்துள்ளனர். எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசியதாவது…

நான் தமிழ்ப்படங்கள் செய்து கொண்டு தான் உள்ளேன் ஆனால் இந்தப்படத்தில் நான் இலங்கைப் பெண்ணாக நடித்துள்ளேன், நார்மல் தமிழே எனக்கு கஷ்டம், ஆனால் இதில் இலங்கைத் தமிழ் பேசி நடித்துள்ளேன், அதிலும் இயக்குநர் ஒவ்வொரு சீனுக்கும் கரக்சன் சொல்லிக்கொண்டே இருப்பார் நன்றாகப் பார்த்துக்கொண்டார். சசிக்குமார் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. ஷீட்டிங் போது எனக்கு சிக்கன் பாக்ஸ் வந்து விட்டது அப்போது சசிக்குமார் சார் தான் வந்து ஆதரவாகப் பேசி ஹாஸ்பிடல் அனுப்பி வைத்தார். இப்படத்தில் எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள் அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..

தயாரிப்பாளர் பாண்டியன் எனக்கு நெருங்கிய நண்பர், என் படத்தில் மேலாளராக வேலை பார்த்தவர். ஒரு நாள் வந்து படம் செய்யப் போகிறேன் என்றார். எப்படி எனக் கேட்டேன், சசிக்குமார் சார் உதவுவதாகச் சொன்னார் என்றார். சத்ய சிவா இந்தக்கதையைச் சொன்ன போது, இந்தப்படத்தை நான் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், அப்படி ஒரு நல்ல கதை. இப்படம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு இந்த குழு தான் காரணம். அவர்கள் உழைப்பு படத்தில் தெரிகிறது. சசிக்குமார் மிக உண்மையான மனிதர். முன்பெல்லாம் ஃபர்ஸ்ட் காப்பி இருந்தால் ரிலீஸ் ஆகிவிடும் ஆனால் இன்று ஃபர்ஸ்ட் காப்பி ரெடியானாலும் பல ரைட்ஸ் காரணமாகப் படம் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது. இன்றைக்கு ஓடிடி சொல்லும் தேதியில் தான் ரிலீஸ் ஆகிறது. சசிக்குமார் மாதிரி விட்டுக்கொடுத்துப் போகும் போது, படம் ரிலீஸ் செய்ய முடியும். எல்லோரும் அதைச் செய்ய வேண்டும். உண்மையாகக் கஷ்டப்பட்ட ஒரு சமூகம், தங்களது சுதந்திரத்திற்காகப் போராடியது தான் இந்தக்கதை, இந்தியாவில் உண்மைச் சம்பவத்தை, உண்மையை எடுப்பது கஷ்டம். உண்மையை எடுத்தால் எதிர்க்கட்சிக்கும் வலிக்கும், ஆளுங்கட்சிக்கும் வலிக்கும் அதனால் தான் நான் உண்மைச் சம்பவத்தினை எடுப்பதில்லை. ஆனால் இப்படத்தில் மிக அழுத்தமான உண்மையை, மிகச்சிறப்பாக எடுத்துள்ளார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் சத்ய சிவா பேசியதாவது…

என்னை என் குடும்பம் ப்ரீடமாக விட்டதால் தான் இப்படத்தை எடுக்க முடிந்தது அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் எல்லோருமே தங்களால் முடிந்த அளவு மிகக் கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஜிப்ரான் சார் பின்னணி இசையில் அவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. நாம் முடித்துக் கொடுக்கும் காட்சி, அவரிடம் போய் வரும் போது, முழுக்க வேறு பரிணாமத்தில் இருக்கும். ஒருவரை நல்லவராகக் காட்ட, சீன்கள் வைக்க வேண்டும் ஆனால் சசிக்குமார் சாரை காட்டினாலே போதும். அதே மாதிரி அப்பாவி, ஏழ்மையானவர் எனும்போது, லிஜோ மோலை காட்டினாலே போதும், தனியாகக் காட்சி வைக்கத் தேவையில்லை. அவர் ஷீட்டில் இலங்கைத் தமிழைக் கற்றுக் கொண்டு பேசியுள்ளார் பெரிய உழைப்பைத் தந்துள்ளார். பாண்டியன் சார் முதல் படமாக என்ன படம் வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம், எங்களுக்குப் பெயர் வரும், ஆனால் பணம் வருமா? சினிமா சூழ்நிலை இப்படி இருக்கும் போது, என்னை விட இந்தக்கதையில் இன்வால்வ் ஆகி, இப்படத்தைச் செய்துள்ளார். அவருக்காக இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். சசிக்குமார் சார் மிக நல்ல மனிதர், இதற்கு முன் அவருடன் ஒரு படம் செய்தேன் அது சரியாகப் போகவில்லை, உடனே அடுத்த படம், பலர் வேண்டாமென சொல்லியிருப்பார்கள், ஆனால் அவர் என்னை, இந்தக்கதையை நம்பினார், அவருக்கு நன்றி. இந்தப்படம் உங்களை நம்பி எடுத்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் சசிக்குமார் பேசியதாவது…

ப்ரீடம் மனதுக்கு நெருக்கமான படம், ஆர்ட் டைரக்டர் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் பேசியே இங்கு தான் பார்க்கிறேன், எப்போதும் அவர் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டே இருப்பார். ஜிப்ரான் உடன் நாலாவது படம், சிறப்பாக செய்துள்ளார். அவருக்கு என் நன்றி. லிஜோ வந்த பிறகு இந்தப்படம் வேறு மாதிரியாக இருந்தது. மணிகண்டன் எனக்கு சாப்பாடெல்லாம் ஊட்டி விடுவார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ஆண்டனி அவர் கஷ்டத்தையெல்லாம் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டார். நாங்களும் நிறையக் கஷ்டப்பட்டுள்ளோம். தயாரிப்பாளர் பாண்டியன் மேனேஜராக தெரியும், முதலில் அவர் தயாரிக்கிறேன் எனச் சொன்னபோது வேண்டாம் என்று சொன்னேன். இல்லை சார் நான் செய்வேன் என்றார். மிக இளகிய மனதுக்காரர் அவரது நம்பிக்கை தான் இந்தப்படம் ரிலீஸ் வரை வந்துள்ளது. இந்தப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரி காமெடியாக இருக்காது, இது ஜெயிலில் படும் கஷ்டத்தைச் சொல்லும் படம், ஆடியன்ஸுக்கு அதைத் தெளிவு படுத்தி விட வேண்டும். 1991 ல் நடந்த உண்மைக் கதை. நமக்குத் தெரியாத ஒரு கதை. இப்படி ஒரு படம் எடுத்ததற்குப் பாண்டியனுக்கு நன்றி. இயக்குநர் சத்ய சிவா ஒர்க் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெற்றி தோல்வி எல்லாம் ஒன்றுமில்லை, அவர் வேலை எனக்குப் பிடிக்கும். அவரது கதையைத் தான் பார்த்தேன். எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் நடிகர் சசிக்குமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழில் பல பிரமாண்ட படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றிய பாண்டியன் பரசுராமன், முதல் முறையாக விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தினைத் தயாரித்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.