சில வருடங்களுக்கு முன்பு ஒரு போலீஸ் உயரதிகாரியை சில இளைஞர்கள் கொல்கின்றனர். தற்போது அதர்வா உள்பட 6 பேர் போலீஸ் பணியில் இணைகின்றனர். அப்போது போலீஸ் உயரதிகாரியை கொடூரமாக கொன்றவர்களின் பிடியில் இந்த 6 பேரும் சிக்கி தவிக்கின்றனர். குழுவினர் ஏன் போலீசாரை கொல்கின்றனர்? சதி திட்டத்தை அதர்வா முரளி முறியடித்தாரா என்பது மீதி கதை. ரவீந்திர மாதவா விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடிப்பிலும், ஆக்ஷனிலும் அதர்வா முரளி பாஸ் மார்க் வாங்கியுள்ளார். போலீஸ் என்றாலே கொலைவெறியுடன் தாக்கும் கேரக்டரில் அஸ்வின் காகுமனு, வில்லத்தனத்தில் தனி முத்திரை பதித்துள்ளார்.
லாவண்யா திரிபாதி அழகாக வந்து, அளவாக நடித்து சிறப்பு சேர்த்துள்ளார். கலகலப்பு ஏற்படுத்த ஷாரா உதவுகிறார். அழகம் பெருமாள், அருள் டி.சங்கர், பரணி, செல்வா, போஸ் வெங்கட், லட்சுமி பிரியா உள்பட அனைவரும் இயல்பாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளனர். சர்வதேச தரத்துக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனின் கேமரா கடுமையாக உழைத்துள்ளது. பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் ஜஸ்டின் பிரபாகரன் தனித்துவம் காட்டி அசத்தியுள்ளார். எடிட்டர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டரின் பணி பாராட்டுக்குரியது. ஆங்காங்கே லாஜிக் மீறல்கள் இருந்தாலும், அதர்வா முரளியை வைத்து முழுநீள ஆக்ஷன் விருந்து கொடுத்துள்ளார் ரவீந்திர மாதவா.