பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படம், ‘ஜாக்கி’. மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து, இந்தியாவில் முதல்முறையாக ‘மட்டி’ என்ற படத்தை இயக்கிய பிரகபல், மதுரையில் நடந்த கிடா சண்டை பந்தயத்தை பார்த்தார். தமிழ் மக்களின் கலாசாரத்தோடு இணைந்த இந்த விளையாட்டை மையமாக வைத்து ‘ஜாக்கி’ என்ற படத்தை எழுதி இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘சண்டை கிடாக்களை வளர்ப்பதற்காக ஐடி வேலையை கூட விட்டுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பிய இளைஞர்களை சந்தித்து பேசியது எனக்குள் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கிடாவை வளர்க்கும் கட்டாரி, அதனுடன் பேசிப் பழகி நெடுநாள் பயணித்து அதை தயார்படுத்துகிறார். அது சண்டைக்கு செல்லும் முன்பு மாலை அணிவித்து, பூஜை செய்து கொண்டாடி மகிழ்கிறார்.
மதுரையில் 3 வருடங்கள் தங்கி கதை எழுதினேன். ‘மட்டி’ படத்தில் நடித்த யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ் ஆகியோர் கிடாக்களுடனும், கிடா கட்டாரிகளுடனும் பழகி பயிற்சிகளை மேற்கொண்டனர். மதுரை மக்கள் அதிக ஒத்துழைப்பு கொடுத்ததால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்தினேன். முக்கிய வேடங்களில் அம்மு அபிராமி, மதுசூதன ராவ் நடித்துள்ளனர். காந்த் எடிட்டிங் செய்ய, சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார். ஜாக்கி பிரபு சண்டை பயிற்சி அளிக்க, என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரியேட்டிவ் புரொடியூசராக ஆர்.பி.பாலா பணியாற்றியுள்ளார். கிடா சண்டையை மையப்படுத்திய முதல் முழுநீள தமிழ் படம் இது’ என்றார்.