பெங்களூரு: கடந்த 2022-ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற படம் ‘காந்தாரா’. இந்தப் படத்தில் சப்தமி கவுடா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கு அஜ்னீஷ் லோகேஷ் இசையமைத்தார். ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இந்தப் படம் உலக அளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. படத்தின் வரவேற்பால், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான ’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டியே இயக்கியுள்ளார். இதில் நாயகியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இந்நிலையில், ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தைப் பார்க்க வருபவர்கள் மது அருந்தக் கூடாது, புகை பிடிக்கக் கூடாது, அசைவம் உண்ணக் கூடாது என படக்குழு அறிவுறுத்தியதை போன்ற போஸ்டர் சமூக வலைத்தளத்தில் பரவியது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் ரிஷப் ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘‘அந்தப் போஸ்டரைப் பார்த்து எனக்கே அதிர்ச்சியாகிவிட்டது. படத்தின் தயாரிப்பு நிறுவனமும் அப்படியான அறிவிப்பை வெளியிடவில்லை.
படத்தின் பிரபலத்திற்கு மத்தியில் தங்களை விளம்பரப்படுத்த நினைக்கும் சிலரின் வேலைதான் இது’’ என்றும் ரிஷப் ஷெட்டி தெரிவித்தார். அந்த போலி போஸ்டருக்கு நாங்கள் எதிர்வினையாற்றக் கூட விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது எனத் தெரிவித்துள்ள நடிகர் ரிஷப் ஷெட்டி, அதில் விதிமுறைகள் விதிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றார்.