சென்னை: அறிவியல் மற்றும் விவசாய விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை விவரிக்கும் ‘ஜி.டி.நாயுடு’ என்ற படத்தில் மாதவன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமய்யா நடிக்கின்றனர். அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். வர்கீஸ் மூலன், விஜய் மூலன், மாதவன், சரிதா மாதவன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற ஆந்தாலஜி படத்தின் ஒரு பகுதியையும், விஷ்ணு விஷால் மற்றும் அவரது தம்பி ருத்ரா நடித்த ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற படத்தையும் இயக்கியிருந்த நடிகர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். படம் குறித்து அவர் கூறியதாவது: ஜி.டி.நாயுடுவின் பிறந்த ஊரான கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடத்தினோம். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீசாகும். எப்போதுமே மாதவனிடம் ஒருவித வசீகரம் இருக்கும். இன்றைய இளைஞர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர்.
இதுபோன்ற ஒரு படத்துக்காக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு ஹீரோ தேவைப்பட்டார். அதனால், இந்த வேடத்துக்கு மாதவன் மிகப்பொருத்தமாக இருப்பார் என்று நான் முடிவு செய்தேன். தினமும் அவருக்கு 2 மணி நேரம் வரை மேக்கப் போட வேண்டும். இதற்காக மாதவன் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். அவரது கடின உழைப்பை நேரடியாக பார்த்து வியந்தோம். படத்தின் 60 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது.
