Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குட் பேட் அக்லி விமர்சனம்

மும்பையில் ‘ரெட் டிராகன்’ என்ற மிகப்பெரிய கேங்ஸ்டராக இருக்கிறார், அஜித் குமார். அவரது மனைவி திரிஷா, ஒரே மகன் கார்த்திகேயா தேவ். அவர் கேங்ஸ்டர் மகனாக வளரக்கூடாது என்று அஜித் குமாரிடம் சண்டை போட்டு, 17 வருடங்கள் மகனை பார்க்க விடாமல் தடுக்கும் திரிஷா, மகனை ஸ்பெயின் நாட்டுக்கு அழைத்து சென்று படிக்க வைக்கிறார். மகனின் 18 வயது பிறந்தநாளை கொண்டாட, நேர்மையான தந்தையாக வருவேன் என்று சத்தியம் செய்திருந்த அஜித் குமார், கேங்ஸ்டர் வாழ்க்கையை விட்டுவிட்டு, மும்பையில் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு சிறைக்கு செல்கிறார்.

18 வருடங்களான நிலையில் மகனை சந்திக்க வருகிறார். ஆனால், திரிஷாவால் பாதிக்கப்பட்ட அர்ஜூன் தாஸ், அவரது மகனை கடத்துகிறார். தந்தை சிறையில் இருந்து வரும்போது, மகனை போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கிறது ஸ்பெயின் நீதிமன்றம். அஜித் குமார், திரிஷாவை பழைய பகை துரத்துகிறது. இறுதியில் அஜித் குமார் தனது மகனை சிறையில் இருந்து மீட்டாரா என்பது மீதி கதை.

ஒன்மேன் ஆர்மியாக படத்தை தோளில் தூக்கி சுமந்திருக்கும் அஜித் குமார், தனது ஸ்டைலில் அட்டகாசமாக நடித்துள்ளார். கணவரின் கெட்ட தொழிலை மறைத்து, அவரை நேர்மையானவராக மகனுக்கு காட்ட துடிக்கும் திரிஷாவின் நடிப்பு சிறப்பு. மகனாக கார்த்திகேயா தேவ் சிறப்பாக நடித்துள்ளார். ஜானி, ஜாமியாக இரட்டை வேடங்களில், வில்லத்தனத்தில் அர்ஜூன் தாஸ் மிரட்டி இருக்கிறார். பிரபு, ஜாக்கி ஷெராஃப், பிரசன்னா, சுனில், ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, டினு ஆனந்த், ஷாயாஜி ஷிண்டே, ‘கேஜிஎஃப்’ அவினாஷ், ரெடின் கிங்ஸ்லி, பிரியா பிரகாஷ் வாரியர் ஆகியோரின் நடிப்பு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

சிறப்பு தோற்றத்தில் சிம்ரன், ‘வாலி’ படத்தின் நினைவுகளுடன் அஜித் குமாருடன் ரொமான்ஸ் செய்வது சுவாரஸ்யமாக இருக்கிறது.  மகனுக்காக கேங்ஸ்டர் தொழிலை விடும் தந்தை, மகனின் உயிரை காப்பாற்ற மீண்டும் அதே தொழிலுக்கு வரும் கதையை, ஜனரஞ்சகமாக இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், எந்த காட்சியிலும் லாஜிக் பற்றி கவலைப்படவில்லை. அது அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கலாம். ஆனால் வெகு ஜனங்களை கவராது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ரகம். பின்னணி இசையில் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார். அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு கதையின் விறுவிறுப்புக்கு உதவியிருக்கிறது.