Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹரிஹர வீரமல்லு விமர்சனம்...

17வது நூற்றாண்டில் கதை நடக்கிறது. ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு குழந்தை சத்யராஜ், ஈஸ்வரி ராவ் தம்பதிக்கு கிடைக்கிறது. அதற்கு ‘ஹரிஹர வீரமல்லு’ என்று பெயர் சூட்டுகின்றனர். பிற்காலத்தில் பலம் வாய்ந்த போர் வீரனாக அவர் மாறுகிறார். மத மாற்றத்துக்கு மக்களை கட்டாயப் படுத்தும் அவுரங்க சீப் (வரலாற்றை திரித்து), மாற மறுப்பவர்களை துன்புறுத்தி அநியாய வரிகளை விதிக்கிறார். பிரிட்டீஷ் அதிகாரிகள் மக்களிடம் கொள்ளையடிக்கின்றனர். வைரத்தை திருடி வரும்படி வீரமல்லுவுக்கு ஜமீன்தார் கட்டளையிடுகிறார்.

அப்போது நிதி அகர்வாலை காதலிக்கும் வீரமல்லு, சார்மினாரில் வைரத்தை திருடும்போது பிடிபடுகிறார். இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில் வைக்கப்பட்டுள்ள கோஹினூர் வைரத்தை திருடி வரும்படி அவருக்கு ஆணையிடப்படுகிறது. தனது சகாக்களுடன் டெல்லிக்கு செல்லும் வீரமல்லு, அவுரங்கசீப்புடன் கடுமையாக மோதுகிறார். இறுதியில் கோஹினூர் வைரம் கிடைத்ததா என்பது மீதி கதை. இதை 2ம் பாகத்தில் பார்க்கலாம்.

லாஜிக்கை மீறி, ஒன்லி ஒன் பவன் கல்யாணின் மேஜிக்கிற்காக படத்தை உருவாக்கியுள்ளனர். அவரும் கிராபிக்ஸ், விஎஃப்எக்ஸ் உதவியுடன் அதிக சிரமமின்றி நடித்திருக்கிறார், ஆடியிருக்கிறார், அடித்திருக்கிறார், பறந்திருக்கிறார். ஏகப்பட்ட கேரக்டர்கள் திணிக்கப்பட்டுள்ளன. அவுரங்கசீப் கேரக்டரில் அட்டகாசமாக வில்லத்தனம் செய்துள்ள பாபி தியோல், பாடலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிதி அகர்வால் மற்றும் சத்யராஜ், நாசர், ரகுபாபு, ஈஸ்வரி ராவ், பூஜிதா பொன்னாடா, தலைவாசல் விஜய், சுனில், ரெடின் கிங்ஸ்லி, தணிகலபரணி, முரளி சர்மா, சுப்பராஜு, சச்சின் கெடேகர், அனசூயா பரத்வாஜ், கபீர் துஹான் சிங் உள்பட பலர், கொடுத்த வேலையை செய்துள்ளனர்.

சண்டைக்காட்சிகள் நீளமாக இருக்கின்றன. 9 ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணியாற்றியுள்ளனர். மதவெறியை தூண்டும் சில காட்சிகள் நெருடலாக இருக்கிறது. ஹீரோவுக்கு அதீத சக்திகள் இருப்பதாக காட்டி காதில் பூ சுற்றியுள்ளனர். கிராபிக்ஸ் காட்சிகள் தனித்து தெரிவது பலவீனம். எம்.எம்.கீரவாணியின் பின்னணி இசை, பாடல்கள் மற்றும் மனோஜ் பரமஹம்சா, வி.எஸ்.ஞானசேகரின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் அரங்க வடிவமைப்பு போன்றவை ஓரளவு காப்பாற்றுகின்றன.

எடிட்டர் கே.எல்.பிரவீன் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். வரலாற்று புனைவு கதை என்று சொல்லி, அவுரங்கசீப் பற்றி தவறான தகவல்களை படம் தருகிறது. நிகழ்கால மத அரசியலுக்கு வக்காலத்து வாங்கியிருப்பது நன்கு தெரிகிறது. கிரிஷ் ஜகர்லமுடி, ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கியுள்ளனர். பில்டப் காட்சிகளையும், இந்துத்துவ வெறியையும் திணித்திருக்கிறது படம்.