Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹரீஷ் கல்யாணுக்கு மீனவர் கொடுத்த அதிர்ச்சி

தமிழில் ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ ஆகிய வெற்றி படங்களில் நடித்திருந்த ஹரீஷ் கல்யாண், தற்போது ‘டீசல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இது வரும் 17ம் தேதி வெளியாகிறது. சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். மீனவராக ஹரீஷ் கல்யாண், வழக்கிறஞராக அதுல்யா ரவி நடித்துள்ளனர். மீனவர் கேரக்டருக்காக படகு மற்றும் லான்ச் ஓட்ட பயிற்சி பெற்ற ஹரீஷ் கல்யாண், மீன் பிடிக்கவும் கற்றுக்கொண்டார். நடுக்கடல் குறித்த அச்சம் விலக வேண்டும் என்பதற்காக, படப்பிடிப்பு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, படக்குழுவினருடன் ஒரு படகில் சென்று நடுக்கடலில் தங்கியிருந்தார். அப்போது அவர்களுக்கு உதவி செய்ய, 70 வயது மீனவர் ஒருவர் படகிலேயே இருந்தார்.

அப்போது முதியவர், தான் மீன் பிடித்த காலத்தில் நடந்த சம்பவம் ஒன்றை ஹரீஷ் கல்யாணிடம் சொல்லி அதிர வைத்திருக்கிறார். அதாவது, ஒருநாள் அந்த மீனவர் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத புயலால் தாக்கப்பட்டு, வங்கதேசத்தின் எல்லையோரம் ஒதுங்கியிருக்கிறார். அப்போது சுமார் 48 நாட்கள் குடிக்க குடிநீரின்றி அவதிப்பட்டு, தனது சிறுநீரை குடித்து உயிர் பிழைத்ததாக சொன்னார். அதைக்கேட்டு ஹரீஷ் கல்யாண் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தை யூடியூப் பேட்டி ஒன்றில் ஹரீஷ் கல்யாண் கூறியுள்ளார்.