Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹீரோயின் ஆன இதய சிகிச்சை நிபுணர்

மருத்துவத்துறையில் இருந்து திரையுலகுக்கு வந்த ஹீரோயின்களில் பாடினி குமாரும் ஒருவர். அடிப்படையில் அவர் இதய சிகிச்சை நிபுணர். ‘பாடினி’ என்றால் தமிழ்ப்புலவி என்று அர்த்தம். பாடினி குமார் கூறுகையில், ‘தமிழகத்தில் பிரபலமான தமிழ் ஆர்வலர்களில் ஒருவரான அருணாசலம் தலைமையில், 18 தமிழ் அறிஞர்கள் சேர்ந்து எனக்கு பெயர் சூட்டினர். இதுபோன்ற தனித்துவமான ஒரு பெயரை எனக்கு சூட்ட வேண்டும் என்பது எனது பெற்றோரின் விருப்பம். நாங்கள் சாதி, மதம் என்று எந்த பாகுபாடும் பார்ப்பது கிடையாது. விவரம் தெரிந்த பிறகு அப்பாவின் பெயரை எனது பெயருடன் இணைத்துக்கொண்டேன்.

இதய சிகிச்சை நிபுணரான நான், சிறுவயது முதலே நடிகை ஆக வேண்டும் என்று விரும்பினேன். பிறகு ‘ஏரோ ஸ்பேஸ்’ பொறியாளர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில் மருத்துவம் படித்தேன். சினிமா ஆர்வம் காரணமாக வாய்ப்பு தேடினேன். நான் நினைத்ததுபோல் எதுவும் எளிதில் அமையவில்லை. சில கசப்பான அனுபவங்களுக்கு பிறகே திரைத்துறைக்குள் வர முடிந்தது. எனது முதல் கேமரா அனுபவம் என்றால், ஒளிப்பதிவாளர் பாலு தயாரித்த ‘திருமணம்’ என்ற டி.வி தொடர். ஹீரோயினாக நடித்த படம், ‘டேக் டைவர்ஷன்’.

பிறகு சில நிறுவனங்கள் நடத்திய ஆடிஷனில் பங்கேற்ற நிலையில், சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, எனது நேரத்தை வீணடிக்காமல் நடிப்பு பயிற்சி பெற்றேன். நான் நடித்த காட்சிகளை கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டேன். அதை பார்த்த பிறகே ‘சீசா’ படத்தின் இயக்குனர் குணா சுப்பிரமணியம் என்னை ஹீரோயினாக நடிக்க தேர்வு செய்தார். அடுத்து ‘ஹார்ட் பீட்’, ‘வேற மாதிரி ஆபீஸ்’ ஆகிய படங்களில் நடித்தேன். திரையுலகிலும், மருத்துவத்துறையிலும் சாதிக்க ஆசை’ என்றார். அவர் நடித்துள்ள ‘சரண்டர்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.