Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தலைவன் தலைவி விமர்சனம்...

மதுரை ஒத்தக்கடையில் சின்னதாக ஒரு ஓட்டல் நடத்தும் விஜய் சேதுபதிக்கும், அவரது காதல் மனைவி நித்யா மேனனுக்கும் இடையே நடக்கும் சண்டையும், இரு குடும்பத்தாரின் தலையீடும் அவர்களை பிரித்ததா? சேர்த்ததா என்பது திரைக்கதை. அவர்களுக்கு இடையே என்ன சண்டை? இருவீட்டாரின் பஞ்சாயத்து சுபமாக முடிகிறதா என்பது கதை.

ஆகாச வீரனாக, பரோட்டா மாஸ்டராகவே வாழ்ந்துள்ளார் விஜய் சேதுபதி. நித்யா மேனனிடம் அடிக்கடி கோபித்து, அடுத்த விநாடியே சரண்டராவது சுவாரஸ்யம். சண்டையில் பொளந்து கட்டுவது வழக்கமான ஸ்டைல். கணவனும், மனைவியும் ஓவராக கத்துவது நெருடினாலும், அதற்கு யோகி பாபு விளக்கம் சொல்வதால் ஏற்கலாம். பன்முக நடிப்பை வழங்கிய நித்யா மேனனுக்கு பல விருதுகள் காத்திருக்கின்றன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு செயின் திருடன் யோகி பாபுவின் ஒன்லைன் காமெடியை நன்கு ரசிக்க முடிகிறது. ‘பருத்திவீரன்’ சரவணன், தீபா சங்கர் மற்றும் செம்பன் வினோத், ஜானகி சுரேஷ் மற்றும் காளி வெங்கட், மைனா நந்தினி ஜோடி பொருத்தம் சூப்பர். வில்லன் ஆர்.கே.சுரேஷ், ரோஷிணி ஹரிப்பிரியன், சென்ராயன், அருள்தாஸ், பாபா பாஸ்கர், வினோத் சாகர், கே.பி.ஜெகன், எம்.சுகுமார், குழந்தை மகிழினி, கல்கி ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

மலை, ஓட்டல், கருப்பசாமி கோயில் ஆகிய இடங்களுக்கு ரசிகர்களை அழைத்துச் சென்றுள்ளது, எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு. சந்தோஷ் நாராயணன் இசை, இதம். `கணவன், மனைவியி விவகாரத்தில் குடும்பத்தினர் தலையிட்டால் என்ன பிரச்னை ஏற்படும் என்பதை கமர்ஷியல் விருந்தாக பரிமாறியுள்ளார், எழுதி இயக்கியுள்ள பாண்டிராஜ். விவாகரத்து என்பது அவரவர் சொந்த முடிவு. சட்டரீதியான தீர்வை சாதாரணமாக சொல்லியிருப்பது நெருடுகிறது.