Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வரலாற்று கதையில் அபி நட்சத்திரா

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்துள்ள படம், ‘ஆட்டி’. இதை ‘மேதகு: பாகம் 1’, ‘சல்லியர்கள்’ ஆகிய படங்களை இயக்கிய தி.கிட்டு இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக, காவல்துறை அதிகாரி வேடத்தில் இசக்கி கார்வண்ணன் நடித்துள்ளார். மற்றும் ‘அயலி’ அபி நட்சத்திரா, ‘காதல்’ சுகுமார், சவுந்தர், பிரவீன் பழனிச்சாமி நடித்துள்ளனர். சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசை அமைத்துள்ளார். சி.மு.இளங்கோவன் எடிட்டிங் செய்ய, முஜிபுர் ரகுமான் அரங்கம் அமைத்துள்ளார். படம் குறித்து அபி நட்சத்திரா கூறுகையில், ‘இந்த படத்தில் எனக்கு மிகவும் வலுவான கதாபாத்திரம் கிடைத்ததால், அதிக ஈடுபாட்டுடன் நடித்துள்ளேன். மாறுபட்ட தோற்றத்தில் என்னை நான் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.

வித்தியாசமான ஜானரில் ஒரு வரலாற்று படத்தில் நடிப்பதை பெருமையான விஷயமாக நினைக்கிறேன். இயக்குனரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இது என் திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும்’ என்றார். இசக்கி கார்வண்ணன் கூறும்போது, ‘ஊர் தலைவி அல்லது குடும்பத்தலைவியை ‘ஆட்டி’ என்று சொல்வார்கள். இந்த உலகிலேயே முதல் பெண்கள் ராணுவம் அமைத்தது தமிழர்கள்தான். ஒரு ஊர் நன்றாக இருப்பதற்கு பெண்கள் நன்றாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பெண்களின் வலிமையை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்காக நாங்கள் உருவாக்கியுள்ள படம் இது’ என்றார்.