Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)

கல்லூரி விடுதி கலாட்டாக்களைக் கொண்ட பிளாக் காமெடி படம் இது. துங்கா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான கதையின் நாயகன் அஜித்துக்கு (பிரஜ்வால்) சினிமா இயக்குனராக வேண்டும் என்பது ஆசை. அதற்காக விடுதியிலேயே ஒரு குறும்படம் தயாரிக்க முயற்சிக்கிறார். அந்த விடுதியின் மிகவும் கண்டிப்பான வார்டன், ரமேஷ் குமார் (மஞ்சுநாத் நாயகா). அவர் மீது அனைத்து மாணவர்களுக்கும் அதிக பயம் இருக்கிறது. அதேவேளையில் பெருங்கோபமும் உண்டு. இதை கதைக்கருவாக வைத்து, அவரையே நடிக்க வைக்க முடிவு செய்கிறார். திட்டப்படி வார்டன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்கிறார்.

தன் சாவுக்கு முக்கிய காரணம் இவர்கள்தான் என்று பத்துப் பதினைந்து மாணவர்களின் பெயர்களை எழுதி வைக்கிறார். இதனால் மாணவர்கள் பயந்து, அவரது பிணத்தை மறைக்க எப்படியெல்லாம் போராடுகின்றனர் என்பதை காமெடியாகச் சொல்லியிருக்கிறது படம். இதில் வார்டன் மட்டும் இறந்தது போல் நடிக்கிறார். மாணவர்களின் ரியாக்‌ஷன் கேமராவில் பதிவு செய்யப்படுகிறது. இப்படத்தை அஜித் எடுத்து முடித்தாரா என்பது மீதி கதை. முழு படத்தையும் தாங்கிப் பிடித்திருப்பவர், வார்டனாக நடித்துள்ள மஞ்சுநாத் நாயகா. கண்டிப்புடன் மாணவர்களை நடத்துவதும், பிறகு பிணமாக நடிப்பதுமாக, வெகு இயல்பாக தன் கேரக்டரை நகர்த்திச் சென்றுள்ளார்.

மாணவர்களாக நடித்துள்ள அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். ஆண்கள் விடுதியில் மறைந்திருந்து படமாக்கியது போல் ஒவ்வொரு காட்சியையும் படமாக்கி இருக்கிறார், இயக்குனர் நிதின் கிருஷ்ணமூர்த்தி. சில காட்சிகளை தொடர்ந்து ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளார், ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப். சமீபத்தில் தியேட்டரில் வெளியான இப்படம், தற்போது ஜீ5 தளத்தி்ல் வெளியாகியுள்ளது.