தமிழில் ‘கண்களால் கைது செய்’, ‘அது ஒரு கனா காலம்’, ‘மது’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ‘பருத்திவீரன்’ என்ற படத்தில் முத்தழகாக நமக்கு பரிட்ச்சயமானவர் பிரியாமணி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார். தமிழில் கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ராவணன்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த இவர் கடந்த 2017ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான முஸ்தபா என்பவரை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பிறகு கேமியோ ரோல் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘நாரப்பா’ என்ற படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்தார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் குறித்து பிரியாமணி பகிர்ந்த விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் பேசுகையில், ”எனக்கு மணிரத்னம் தான் மிகவும் பிடித்தமான இயக்குனர். அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தால், அந்த படத்தில் நடிக்க என் கையை வெட்டவும் நான் தயாராக இருக்கிறேன். அவரது படத்தில் நடிப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம். அதை நான் என் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அது என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, அது குறித்து கவலை இல்லை, அவர் படத்தில் நடிப்பது மட்டுமே எனக்கு முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
