Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இளையராஜா வழக்கு எதிரொலி குட் பேட் அக்லி நெட்பிளிக்சிலிருந்து நீக்கம்?

சென்னை: நடிகர் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தொடர்பாக இளையராஜா தொடர்ந்த வழக்கால் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இந்த வருட தொடக்கத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில், தனது இசையில் ஏற்கனவே வேறு திரைப்படங்களில் வெளியான ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாய் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்சக் குருவி’ ஆகிய பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், அனுமதியில்லாமல் பயன்படுத்திய பாடல்களை படத்தில் இருந்து நீக்கவும், இதற்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் வக்கீல் மூலமாக அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்த பட தயாரிப்பு நிறுவனம், சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாகக் கூறியது. ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற இளையராஜா பாடல்களால் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்தும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நீக்கம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.