Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நிருபர் மீது கஜோல் கடும் கோபம்

இந்த ஆண்டுக்கான மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள் விழா மும்பையில் நடந்தது. இந்திய திரையுலகில் கஜோல் படைத்த சாதனைகளை பாராட்டி ராஜ்கபூர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது கஜோல் மராத்தி மொழியில் பேசினார். பிறகு நிருபர்களை சந்தித்த அவர், ஆங்கிலம் கலந்த மராத்தி மொழியில் பேசினார். உடனே ஒரு நிருபர், இந்தியில் பேசும்படி உத்தரவிட்டார். உடனே கஜோலின் முகம் மாறியது. அவர் கூறுகையில், ‘இப்போது நான் பேசியதை மீண்டும் இந்தியில் பேச வேண்டுமா? நான் பேசுவது யார், யாருக்கு புரியுமோ அவர்கள் புரிந்துகொள்ளட்டும்’ என்று இந்தியில் சொல்லிவிட்டு, மீண்டும் ஆங்கிலம் கலந்த மராத்தி மொழியில் பேசினார்.

அவர் அளித்த பேட்டியில், அவர் கடுமையாக கோபப்பட்ட பகுதி வைரலானது. இந்தி பேசுபவர்கள் கஜோலை கடுமையாக விமர்சித்தனர். ‘நடிப்பதற்கு இந்தி படங்கள் வேண்டும். சம்பாதிக்க இந்தி மொழி வேண்டும். ஆனால், இந்தி மொழியில் பேச மாட்டாரா? இனி அவர் மராத்தி மொழி படங்களில் மட்டுமே பணியாற்றட்டும். இந்தியை அவர் மதிக்கவில்லை என்றால், படத்தை ஏன் இந்தியில் டப்பிங் செய்ய வேண்டும்?’ என்று கேட்டுள்ளனர்.

ஆனால், இதுகுறித்து கண்டுகொள்ளாத கஜோல், விருது விழாவுக்கு தனது அம்மாவுடன் சென்ற ஒரு வீடியோவை பதிவிட்டு, ‘ஒருகாலத்தில் எனது அம்மா நடந்து சென்ற அதே மேடையில், எனது பிறந்தநாளில் நானும் நடப்பது, பிரபஞ்சம் எனக்கு நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை நினைவூட்டுவது போல் உணர்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.