Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரூ.100 கோடி வசூலை நெருங்கிய கல்யாணி

நடிகரும், பாடகருமான துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான பான் இந்தியா படம், ‘லோகா சாஃப்டர் 1: சந்திரா’. இதில் சூப்பர் (வுமன்) ஹீரோவாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மற்றும் ‘பிரேமலு’ நஸ்லென் கே.கபூர், நடன இயக்குனர் சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். யானிக் பென் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால், மாளவிகா மோகனன், ‘பூவே உனக்காக’ சங்கீதா நடித்த ‘ஹிருதயபூர்வம்’, பஹத் பாசில் நடித்த ‘ஓடும் குதிர சாடும் குதிர’ ஆகிய படங்களுடன் ‘லோகா சாஃப்டர் 1: சந்திரா’ படமும் ரிலீசானது. மற்ற இரண்டு படங்களை விட இப்படத்துக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் நாளில் 250 திரைகளில் வெளியான இப்படம், அடுத்த நாளில் இருந்து 325 திரைகளாக அதிகரித்தது. தொடர்ந்து சென்னை, கோவை ஆகிய நகரங்களிலும் திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 நாட்களில் 81 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. திங்கள் நிலவரப்படி இந்தியா முழுவதும் 31 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்நிலை நீடித்தால், இன்று இப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துவிடும் என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் சொல்கின்றனர். நிவின் பாலியின் ‘பிரேமம்’, மம்மூட்டியின் ‘டர்போ’ ஆகிய மலையாளப் படங்களின் சாதனையை இப்படம் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லோகா சாஃப்டர் 1: சந்திரா’ படம் 30 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. சிறப்பு வேடத்தில் டொவினோ தாமஸ் நடிக்க, இதன் 2வது பாகத்துக்கான லீடில் துல்கர் சல்மான் தோன்றியதை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.