Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கம்மர சம்பவம், லக்கி பாஸ்கர், லோகா: ஹாலிவுட் போகிறார் புரொடக்‌ஷன் டிசைனர் பெங்லன்

சென்னை: கலை இயக்குனர் போல் தயாரிப்பு வடிவமைப்பாளர் (புரொடக்‌ஷன் டிசைனர்) பணி ஒரு படத்துக்கு மிகவும் பலம் வாய்ந்தது. இயக்குனர் ஸ்கிரிப்ட் உருவாக்கிய பிறகு அதற்கு வடிவம் தருபவர் புரொடக்‌ஷன் டிசைனர்தான். கேரளாவை சேர்ந்த பெங்லன், இந்திய சினிமாவின் முன்னணி புரொடக்‌ஷன் டிசைனராக இருக்கிறார். கம்மர சம்பவம் மலையாள படத்துக்காக இவர் தேசிய விருது பெற்றவர்.

அவர் கூறியது: ஆரம்பத்தில் ஓவியனாக வாழ்க்கையை தொடங்கினேன். அதில் இருந்த ஆர்வம்தான், தயாரிப்பு வடிவமைப்பில் பணியாற்ற உதவியது. ஒரு ஸ்கிரிப்ட் உருவானதும், அதற்கான கட்டமைப்புகளையும் வடிவங்களையும் அந்த ஸ்கிரிப்ட் கேட்கும் விஷயங்களையும் உருவாக்கி தருவதுதான் எனது வேலை. அது காட்சிக்கான இடமாக இருக்கலாம், பொருளாக இருக்கலாம். லைட்டிங், ஷாட்ஸ் உள்பட ஒரு படத்துக்கான முழு வடிவம் தரும் வேலைகளில் ஈடுபடுவேன்.

தமிழில் கார்த்தி நடித்த ஜப்பான் படத்தில் பணியாற்றினேன். லக்கி பாஸ்கர் படத்தில் பணியாற்றியது பெரும் சவாலாக இருந்தது. அது பீரியட் படம். குறைந்த நாட்களில் அதற்கான செட்களை உருவாக்க வேண்டியது இருந்தது. அதற்காக இரவு, பகல் உழைத்து தயார் செய்தோம். அதேபோல் லோகா படம் சூப்பர் உமன் படம் என்பதால், அதிலும் பல்வேறு நுணுக்கங்களை பார்த்து பார்த்து கையாண்டேன். இப்போது காந்தாரா சாப்டர் 1 படத்தை முடித்திருக்கிறேன்.

இந்த படத்துக்காக 2 வருடங்கள் உழைத்திருக்கிறோம். இது வேறொரு உலகத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும். அடுத்த மாதம் வெளியாகிறது. இதை கண்டிப்பாக தியேட்டர்களில் சென்று ரசிகர்கள் பார்க்க வேண்டும். அது அவர்களுக்கு அலாதியான அனுபவத்தை தரும். அடுத்ததாக சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கும் படம், பிருத்விராஜின் படம், மற்றொரு ெதலுங்கு படத்திலும் பணியாற்றி வருகிறேன்.

சினிமா துறையில் எனக்கு முழு துணையாக நின்று ஆதரிப்பவர் துல்கர் சல்மான். அவர் எப்போதும் எனக்கு நெருக்கமானவர். 32 வயதிலேயே புரொடக்‌ஷன் டிசைனருக்கான தேசிய விருது பெற்ற முதல் கலைஞன் நான்தான். இது பெருமையாக உள்ளது. அடுத்ததாக பான் இந்தியா படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறேன். பாலிவுட், ஹாலிவுட்டிலும் பணியாற்ற வாய்ப்பு வந்துள்ளது. இவ்வாறு பெங்கலன் கூறினார்.