இப்படம், `காந்தாரா’ முதல் பாகத்தின் பிளாஷ்பேக்கை விவரிக்கிறது. ஈஸ்வர பூந்தோட்டம் என்கிற காந்தாரா வனத்தில், தனது மக்களுடன் வசித்து வருகிறார் ரிஷப் ஷெட்டி. அந்த இடத்தை அபகரிக்க நினைப்பவர்களை வேரோடு களையெடுக்க முற்படுகிறார். அங்குள்ள இயற்கை வளத்தை வனத்திலுள்ள ஒரு இனமும் மற்றும் பாங்கரா மன்னர் ஜெயராம், அவரது மகன் குல்சன் தேவய்யாவின் சாம்ராஜ்ஜியமும் அடைய துடிக்கிறது. அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, காந்தாரா மக்களின் பூர்வகுடி இடத்தையும், உரிமையையும் பாதுகாக்க ரிஷப் ஷெட்டி என்ன செய்கிறார், அது அவரால் முடிந்ததா என்பது மீதி கதை.
யானை பலம் கொண்டு, தன் இனத்தை பாதுகாக்க தீயவர்களுடன் மோதும் ரிஷப் ஷெட்டி, படம் முழுக்க ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். அவரது நடிப்பை ஒரு வரையறைக்குள் அடைக்க முடியவில்லை. இறுதியில் சாமியாடும் காட்சிகளில் அவரது எனர்ஜி, 25 ஆயிரம் வோல்ட் மின்சாரத்துக்கு சமம். பாங்கரா மன்னன் குல்ஷன் தேவய்யாவின் பாடிலாங்குவேஜும், மேனரிசங்களும் கவனத்தை ஈர்க்கின்றன. இளவரசியாக ருக்மணி வசந்த் வசீகரிக்கிறார்.
ரிஷப் ஷெட்டியை வெட்டிச் சாய்க்க வாளேந்தி ஆக்ஷன் களத்திலும் குதிக்கிறார். ஒரு இனத்தின் தலைவனாக, மிரட்டலான கெட்டப்பில் வரும் சம்பத் ராம் நடிப்பில் அசத்தியுள்ளார். சாமர்த்தியமாக செயலாற்றி சாம்ராஜ்யத்தின் எல்லையை விஸ்தரிக்கும் ஜெயராம் மற்றும் பிரமோத் ஷெட்டி, பிரகாஷ் துமினாட், ராகேஷ் பூஜாரி ஆகியோரும் தங்களின் அனுபவ நடிப்பால் கவனத்தை ஈர்க்கின்றனர்.
அடர்ந்த வனம், பனியில் குளித்த மலை மற்றும் ஸ்டண்ட் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ்.காஷ்யப் அசத்தியுள்ளார். விஎஃப்எக்ஸ் காட்சிகள் தரமாக இருக்கின்றன. கலை இயக்குனர் தரணி கங்கேபத்திரா, ஆடை அலங்கார இயக்குனர் பிரகதி ஷெட்டி, ஸ்டண்ட் இயக்குனர்கள் அர்ஜூன் ராஜ், டோடார் வாசரோவ் (ஜூஜி), ராம்-லஷ்மன், மகேஷ் மேத்யூ, மிதுன் சிங் ராஜ்புத், எடிட்டர் சுரேஷ் மல்லையா ஆகியோரின் பணிகள் பாராட்டுக்குரியவை.
பி.அஜ்னீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை, காட்சிகளின் வீரியத்தை அதிகரித்துள்ளது. தெய்வீக அம்சத்தையும், புராண கதையையும் இணைத்து வழங்கிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கன்னட சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே புதிய மைல் கல்லை பதித்திருக்கிறார். முற்பகுதி சோர்வடைய வைப்பதை தவிர்த்து, படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.