Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கண்ணப்பா: விமர்சனம்

உடுமூரில் (இன்றைய ஸ்ரீ காளஹஸ்தி) 5 ஆதிக்குடிகள் வசிக்கின்றன. அங்கு கடவுள் நம்பிக்கையின்றி நாத்திகராக வளர்கிறார், வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன் (விஷ்ணு மன்ச்சு). அங்குள்ள மலையில் வாயு லிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். அதை வெறும் கல் என்று தூற்றுகிறார், விஷ்ணு மன்ச்சு. அதன் சக்தியை அறிந்த வேறொரு இனக்குழு தலைவர் அர்பித் ரங்கா, உடுமூர் மீது படையெடுத்து வருகிறார். பிறகு விஷ்ணு மன்ச்சு என்ன செய்தார்? நாத்திகரான அவர் எப்படி சிவபக்தராக மாறினார் என்பது மீதி கதை. 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கையுடன் சிறிது கற்பனை கலந்து, திரை வடிவமாக கொடுத்துள்ளார் இயக்குனர் முகேஷ் குமார் சிங். கதை, திரைக்கதை எழுதி திண்ணனாகவே வாழ்ந்துள்ள விஷ்ணு மன்ச்சு, தனது லட்சியத்தில் ஜெயித்துவிட்டார்.

மகாதேவ சாஸ்திரியாக மோகன் பாபு, குழு தலைவர்களாக சரத்குமார், மதுபாலா, முகேஷ் ரிஷி, சம்பத் ராம், கன்னட தேவராஜ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். விஷ்ணு மன்ச்சுவுக்கு சிவசக்தியை உணர வைக்கும் பிரபாஸ், வில்வித்தையில் மோதும் மோகன்லால் மற்றும் சிவபெருமான், பார்வதியாக அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால் மற்றும் பிரீத்தி முகுந்தன் கவனத்தை ஈர்க்கின்றனர். நியூசிலாந்தின் இயற்கை அழகை பிரமாண்டமாக ஒளிப்பதிவு செய்துள்ள ஷெல்டன் சாவ், பின்னணி இசை மற்றும் பாடல்களில் பலத்தைக் கூட்டிய ஸ்டீபன் தேவஸ்ஸி ஆகியோரின் பணிகளும் பாராட்டுக்குரியது. கண்ணப்ப நாயனார் பற்றி அறியாத தலைமுறையினரும், சிவபக்தர்களும் பக்திப் பரவசத்துடன் பார்க்க வேண்டிய படம் இது. காதல் மற்றும் தனி மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்ததையும், படத்தின் நீளத்தையும் குறைத்திருக்கலாம்.