Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கசிவு: விமர்சனம்

குக்கிராமத்தில் தனிமையில் வசிக்கும் பொன்னாண்டி தாத்தாவுக்கும், பார்வதி பாட்டிக்கும் பக்கத்து வீட்டு சிறுவன் சங்கரன் மீது தனி பாசம். ஒரு நாள் எதிர்பாராவிதமாக பொன்னாண்டி தாத்தா கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து, நடக்க முடியாமல் படுக்கையில் விழுகிறார். அவர் இறக்கும் தருவாயில் சங்கரனை அழைத்து, தன் மன பாரத்தை இறக்கி வைக்கிறார். அது என்ன, இதனால் அவரது இத்தனை வருட கவுரவம் என்ன ஆகிறது என்பது மீதி கதை.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி என்கிற பி.மாணிக்கவாசகத்தின் சில சிறுகதைகள் திரைப்படங்களாகி, மனிதர்களை உலுக்கி எடுத்திருக்கிறது. அந்த வரிசையில் அவரது சிறுகதை ‘கசிவு’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. அவரே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியிருக்கிறார். வரதன் செண்பகவல்லி இயக்கியுள்ளார். பொன்னாண்டி தாத்தாவாக வாழ்ந்திருக்கும் தேசிய விருது கலைஞர் எம்.எஸ்.பாஸ்கர், இன்னொரு விருதுக்கு அடித்தளம் போட்டிருக்கிறார்.

அற்புதமான நடிப்பு மற்றும் பாடிலாங்குவேஜ். பார்வதி பாட்டியாக ‘கயல்’ விஜயலட்சுமி யதார்த்தமாக நடித்துள்ளார். மற்றும் சங்கரனாக பி.அர்ஜூன், ஹலோ கந்தசாமி, தாரணி சுரேஷ் குமார், ராகுல், எஸ்.ராஜகுமாரி, ஆர்.ரஞ்சித் குமார், வேல் கார்த்திக் ஆகியோருடன் பள்ளி சிறுவர்கள் கச்சிதமாக நடித்துள்ளனர். கிராமத்து எளிய அழகை கண்முன் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் ஜி.முருகன், மென்மையான கதையை மனதில் படரவிட்ட இசை அமைப்பாளர் ஜெயா கே.தாஸ் பணிகள் பாராட்டுக்குரியவை. ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் இன்னொரு முகத்தை காட்டுவது ஏற்புடையதா என்ற விவாதத்தை கிளைமாக்ஸ் தொடங்கி வைத்துள்ளது. சர்வதேச விருதுகள் பெற்ற இப்படம், ஓடிடி பிளஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.