Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கடத்தல்

கூலிக்கு கொலை செய்யும் ஒருவரது மகன், எம்.ஆர்.தாமோதர். தன் மகன் தந்தை மாதிரி கொலைகாரனாக மாறிவிடக்கூடாது என்று, அவரை அதிக கவனத்துடன் வளர்க்கிறார் அம்மா. ஆனால், விதி வேறுவிதமாக விளையாடுகிறது. மதுரைக்கு வேலைக்குச் செல்லும் அவரைத்தேடி நண்பர்கள் வருகின்றனர். மதுரையில் ஒரு கொலை செய்யும் அசைன்மெண்டோடு வந்த அவர்கள், பிறகு தங்கள் வேலையை முடித்துக்கொண்டு செல்ல, அந்த கொலைப்பழி எம்.ஆர்.தாமோதர் மீது விழுகிறது. இதனால், எதிராளிகள் அவரைத் தாக்குகின்றனர். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் அவர், எதிர்பாராவிதமாக ஒரு கொலை செய்துவிடுகிறார். தாயின் சொல்லை மீறி கொலைகாரனாக மாறிய அவர், அடுத்து என்ன செய்கிறார் என்பது மீதி கதை.

வன்முறை கூடாது என்பதை நிறைய வன்முறைக் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார், இயக்குனர் சலங்கை துரை. ஹீரோ எம்.ஆர்.தாமோதர், கேரக்டருக்கேற்ற தோற்றத்துடன் இருக்கிறார். நடிப்புக்கு இன்னும் பயிற்சி பெற வேண்டும். விதிஷா, ரியா, நிழல்கள் ரவி, சுதா போன்றோர் நடித்துள்ளனர். சிங்கம்புலி அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். ராஜ் செல்வா ஒளிப்பதிவில் ஆங்காங்கே தொழில்நுட்ப குறைபாடுகள் தெரிகிறது. எம்.காந்த் பின்னணி இசையில் இரைச்சல் அதிகம். கதைக்கு தொடர்பே இல்லாமல் கடத்தல் சம்பவத்தை இணைத்துள்ளனர். அதை தவிர்த்து அம்மா, மகன் கதையை நேர்க்கோட்டில் சொல்லியிருந்தால் படம் கவனிக்கப்பட்டு இருக்கலாம்.